(இ - ள்.) கொடிச்சியர்-குறிஞ்சிநிலப் பெண்களது; புனத்து அயல் குறிஞ்சி-தினைப்புன இடத்திலுள்ள குறிஞ்சி மரத்தின் மலர்கள்; நெய்பகர் இடைச்சியர்-நெய்விற்கின்ற முல்லை நிலத்துப் பெண்களின்; கதுப்பு அயல்கமழும்-கூந்தலின் இடத்தில் மணம்வீசும்; ஏழைஅம் கடைச்சியர்-பேதைமைக் குணத்தையுடைய அழகிய மருதநிலத்துப் பெண்கள்; களைஎறி குவளை-களைபறித்து எறிந்த குவளைமலர்கள்; கானல்வாய்-கடற்கரைச் சோலைகளிலுள்ள; தொடுத்துஅலர் பிணையலார்-தொடுக்கப்பட்டு மலர்ந்த மலர்மாலைகளையுடையவர்களான நெய்தனிலத்துப் பெண்களினுடைய; குழலுள் தோன்றும்-கூந்தலினிடத்தே விளங்கும். (எ - று.) இச்செய்யுளில் குறிஞ்சிநிலத்தோடு முல்லைநிலத்திற்கும் மருதநிலத் தோடு நெய்தல்நிலத்திற்கும் கலப்புக் கூறப்பட்டது. இதனால் நிலங்கள் ஒன்றற்கொன்று அண்மையில் இருத்தல் விளங்கும். நெய்தல் நிலத்து மகளிர்பெயர் நுளைச்சியர். இடைச்சியர், கடைச்சியர் என்பன இடையர் கடையர் என்பவற்றின் பெண்பால், இடையர் குறிஞ்சி நிலத்திற்கும் மருதநிலத்திற்கும் இடையில் வாழ்பவர். கடையர் இறுதியாகிய நிலத்தில் வாழ்வார். நிலங்களின் பெயர்கள் அவைகளிலுள்ள மரஞ்செடி கொடிகளின் பெயர்களால் அமைந்தன. |