பக்கம் எண் :

பக்கம் : 34
 

நோக்கிப் பெரும்பெயர் மன்னர்க்கொப்ப மனைவகுத்து,“ என்றார் நெடுநல்வாடையினும் (76
- 79); இதன் எதிர்மொழி புறணி. வேலி-பாதுகாவல். நாகலோகம்-பாம்புகளின் உலகமாகிய
போகவதி எனினுமாம். அவ்வுலகம் சைன நூல்களில் பவணலோகம் எனப்பெறும். உண்டு,
இருதிணை ஐம்பால் மூவிடத்திற்கும் பொதுவான உடன்பாட்டுக் குறிப்புமுற்று.

( 1 )

நகரத்தின் அமைதி
37. சங்கமேய் தரங்க வேலித் தடங்கடற் பொய்கை பூத்த
அங்கண்மா ஞால மென்னுந் தாமரை யலரி னங்கேழ்ச்
செங்கண்மால் சுரமை யென்னுந் தேம்பொகுட் டகத்து வைகும்
நங்கையார் படிவங் கொண்ட நலத்த 1து நகர மன்றே.
 
     (இ - ள்.) சங்கம்மேய்-சங்குகள் மேய்கின்ற; தரங்கம் வேலி -அலைகளாகிய
அரணையுடைய; தடம் கடல் பொய்கை பூத்த - பெரிய கடலாகிய தடாகத்தினிடத்திலே
மலர்ந்த; அம் கண் மா ஞாலம் என்னும் - அழகிய இடத்தையுடைய பெரிய நிலவுலகம்
என்று கூறப்பெறும்; தாமரை அலரின் - தாமரைப்பூவின்; அம் கேழ் - அழகிய
ஒளியமைந்த; செம் கண்மால் சுரமை என்னும் - சிவந்த கண்களை யுடைய திவிட்டன்
பிறத்தற்கிடமான சுரமை நாடென்கிற; தேம் பொகுட்டு அகத்து - இனிய
பொகுட்டினிடத்திலே; வைகும் - தங்கியிருக்கின்ற; நங்கையார் படிவம்கொண்ட -
திருமகளினது வடிவத்தைக்கொண்ட; நலத்தது - நல்ல தன்மையுடையது; நகரம் -
அப்போதனமாநகரம், ( எ - று.)

இஃது உருவக அணி. கடல்-பொய்கை; மண்ணுலகு-தாமரைப்பூ; சுரமைநாடு-பொகுட்டு;
போதனமா நகரம் - திருமகள். செல்வச் சிறப்பினாலும் அழகினாலும் போதனமாநகரம்
திருமகளைப்போற் சிறந்து விளங்குகின்றது. இமவான் என்னும் மலையில் மரகதப்பாறையில்
பத்மை என்னுந் தாமரையில் திருமகள் தோன்றினாள் என்று சைன நூல்கள் கூறும்.
  அருமணி மரகதத் தங்க ணாறிய
எரிநிறப் பொன்னித ழேந்து தாமரைத்
திருமக ளிவளெனத் திலக வெண்குடைப்
பெருமகன் கோயிலுட் பேதை வைகுமே.

     (பாடம்) 1. நலத்ததந்நகரமன்றே.