பக்கம் எண் :

பக்கம் : 716
 

     வளரல் - மணங்கள் கமழும் அழகிய பாவையை ஈனாதேகொள், மணங்கள் கமழும்
அழகிய பாவையை ஈனுவையாயின், நறுங்குரவே - நறியகுராமரமே
நீ, இளையாரால் கணங்களோடு பறிப்புண்டி கண்டாய் - இளமகளிர்களாலே கூட்டத்தோடே
வந்து பறிக்கப்படுவாய் காண்; கண்டாய், வாழி: முன்னிலை யசைகள், (எ - று.)
குரவம்பூவை, பாவை என்பது மரபு, இளமகளிர்கள் குராமலரைப் பறித்து மகவெனவைத்து
ஆட்டயர்தல் மரபு.
 

( 302 )

நங்கை புன்முறுவல் பூத்தல்
1129. இன்னண மிளையவர் பாடக் கேட்டலு
மன்னவன் மடமகண் முகத்து வாணிலா
மின்னியோ ரணிநகை 1முகிழ்த்து மீள்வது
கன்னவி றோளவன் கண்கொண் டிட்டவே.
 

     (இ - ள்.) இன்னணம் இளையவர் பாடக் கேட்டலும் - இவ்வாறு அவ்விள மகளிர்கள்
இசைபாடுதலைக் கேட்டவுடனே மன்னவன் மடமகள் முகத்து வாள் நிலா மின்னி -
சடிமன்னனின் இளமகளாகிய சுயம்பிரரையின் முகத்தே ஒளி நிலாத் தவழ்ந்து, ஓர் அணி
நகை முகிழ்த்து மீள்வது - ஓர் அழகிய முறுவல் பூத்து மறைந்ததனை, கல்நவில்தோளவன்
கண் கொண்டிட்டவே - கல்லைஒத்த தோளையுடைய திவிட்டநம்பியின் கண்கள் கண்டன,
ஏ: அசை, (எ - று.)

இவ்வாறு மகளிர் பாடக் கேட்டவுடன், நங்கை முகத்து ஓர் அணி நகை முகிழ்த்து மீள,
அதன் நம்பி கண்டனன், என்க.
 

( 303 )
திவிட்டன் தேவியுடன் மாடம் புகுதல்
1130. உழையவ ரடிமுதல் பரவ வொண்சுடர்க்
குழையவ ளொளி 2கவரக் கோடுயர்
மழைதவழ் 3மாலைய மாட மேறினான்
முழையம ரரியர சனைய மொய்ம்பினான்.
 

     (இ - ள்.) முழைஅமர் அரி அரசு அனைய மொய்ம்பினான் - குகையில் உறைகின்ற
அரசசிங்கத்தை ஒத்த வலிமையுடைய திவிட்டன், உழையவர் - உழைக்கலமகளிர்கள், அடி
முதல் பரவ - அடிகளிலே வணங்கிப் புகழ, ஒண்சுடர்க் குழையவள் ஒளி - ஒளிசுடரும்
தோடணிந்த சுயம்பிரபையின் திருமேனியின் ஒளி, மனம்கவர - தன் மனத்தைக்
கொள்ளைகொள்ள, மழை தவழ் மாடம் ஏறினான் - முகில்தவழும் தன்மையுடைய உயர்ந்த
மாடமிசையே ஏறுவானாயினான், (எ - று.)

அரியரசனைய மொய்ம்பினான், குழையவள் ஒளி மனங்கவர, அவளொடு மாடமேறினான்,
என்க.

----------

(304)

எட்டாவது
கல்யாணச் சருக்கம் முற்றிற்று.


     (பாடம்) 1. முகிழ்ப்ப. 2. மணங். 3. மதலைய.