இது விசயதிவிட்டர் கோமுடிசூட்டப் பெறுதலையும் சுயம்பிரபை கோப் பெருந்தேவிப் பட்டம் சூட்டப் பெறுதலையும் கூறும் பகுதியாம். இதன்கண் :- அச்சுவகண்டன் திவிட்டனுக்கும் சுயம்பிரபைக்கும் நிகழ்ந்த திருமணச் செய்தியையும், திவிட்டன் திறை செலுத்த மறுத்தமையும், அறிந்து பெருஞ் சினங்கோடலும், அமைச்சருடன் ஆராய்ந்து போதனத்தின்மேற் போர்க்குப் புறப்படக் கருதுதலும், இச்செய்தியை அறிந்த ஒற்றன் போதனத்தே வந்து சடி முதலியோர்க்குரைத்தலும், விசயதிவிட்டர்களின் வீரப் பேச்சும், அச்சுவகண்டன் படையுடன் போதனத்தை எய்துதலும் இருபடைகளும் போர் ஆற்றுதலும், அப்போரின்கண் நிகழ்ந்த வீரர்களின் மறமொழிகளும், அச்சுவகண்டன் துணைவரும் மக்களும் இறத்தலும், அச்சுவகண்டன் சினந்து சண்டவேகை என்னும் பேயை ஏவுதலும், அப்பேயின் மாயப் போரும், திவிட்டன் பேருருக் கோடலும், அப்பேய் அஞ்சி மறைதலும், சங்குவில் கருடன் முதலிய அருங்கலங்கள் திவிட்டனை அடைதலும், அவற்றை மேற்கொண்டு அச்சுவகண்டனோடு போர் ஆற்றுதலும், அச்சுவகண்டன் வீழ்தலும், அவன் முதன் மனைவி உயிர்நீத்தலும், ஏனைய தேவியர் புலம்பலும், அவர்தம் தாபத நிலையும், விசயதிவிட்டர் முடிசூடுதலும், சுயம்பிரபைக்குத் தேவி்ப் பட்டம் சூட்டலும், சடி முதலியோர் தத்தம் ஊர் செல்லலும் பிறவும் கூறப்படும். |