(இ - ள்.) விரைசெலல் இவுளித்தேரோய் - விரைந்த செலவினையுடைய புரவிபூண்ட தேரையுடைய வேந்தனே, விஞ்சையர் உலகம் ஆளும் அரைசர்கள் - விச்சாதரர் உலகத்தை ஆளாநின்ற அரசர்கள் பலரும், திகிரி வேந்தன் அச்சுவகண்டனோடும் - ஆழியேந்திய வேந்தனாகிய அச்சுவ கண்டனுடனே, கடல்கள் ஏழும் - ஏழு கடலும் ஒருங்கே திரண்டு, திரைசெல வுரறி - அலைகள் விரைந்து செல்லுமாறு முழங்கி, ஞாலம் தின்னிய - உலகத்தை விழுங்கும் பொருட்டு, கரைசெல வருவபோல் - கரையின்மேல் படர வருவதைப் போன்று, நம்மேல்வரக் கருதுகின்றார் - நம்மீது போர் செய்ய வருதலை எண்ணுகின்றனர், (எ - று.) அரசே! விச்சாதர வேந்தர் பலர், அச்சுவகண்டனோடு, ஊழிக் காலத்துக் கடல்போன்ற படையோடே, நம்மேற் போர் ஆற்றலுக்கு வரக் கருதியுள்ளார் என்றான், என்க. |
(இ - ள்.) அரைசர்கள் வருக - அவ்வேந்தர்கள் நம்மேல் வருவார் எனின் வருக, அதுபண்டே அறிந்ததன்றே - அவர் அவ்வாறு வருவர் என்பது யாம் முன்னரே அறிந்த தொன்றே அன்றோ, போக - ஆதலால் அச்செய்தியை ஒழிக, மணிவண்ணன் - நந் திவிட்ட நம்பி, வரைசெறி சிங்கஏறு ஒழித்த ஞான்று - மலைக்குகையின்கண் உறைந்த ஆண்சிங்கத்தைப் பிளந்துகொன்றொழித்த பொழுது, விரைசெறி பொழில்கொள் சோலை விஞ்சையர் உலகிற் பட்டது - மணம் நிறைந்த பெருமையுடைய சோலைசூழ்ந்த விச்சாதரருலகத்தே நிகழ்ந்ததனை சிறிது உரை என்னலோடும் - சிறிது நீ கூறுக என்று சடிமன்னன் உரைத்தவுடனே, ஒற்றனும் உரைக்கலுற்றான் - அவ்வொற்றனும் கூறலானான், (எ - று.) |