பக்கம் எண் :

பக்கம் : 720
 

      பொழில் - பெருமை. சுயம்பிரபையைத் திவிட்டனுக்கு மணம் செய்ய
எண்ணியபொழுதே, அச்சுவகண்டன் இம்மணநிகழ்ச்சி கேட்டுப்போர்க்கு வருதல் திண்ணம்
என்பது, யாம் பண்டே அறிந்த உண்மை ஆகலின் அவர் வரின், வருக! அச்செய்தியை
விடு! நம்பி, அரிமாலினை அழித்தமை கேட்டு விச்சாதரர் நாட்டில் நிகழ்த்தனைக் கூறுதி
என்றான், என்க.
 

( 4 )

ஒற்றன் விஞ்சையருலகிலுற்றமை உரைத்தல்
1135. அருளுமா றடிகள் 1கேண்மோ
     வரியர சதனை யாரு
மருளுமா றிளைய காளை
     வாய்பிளந் திட்ட வார்த்தை
தெருளுமா றொருவன் 2கூறக்
     கேட்டலுஞ் சேணில் வாழ்வார்
வெருளுமா றுள்ள 3மெல்லாம்4
     வெருளிமெய் விதலை கொண்டார்.
 
     இதுமுதல் 53 செய்யுள்கள் ஒரு தொடர் ஒற்றன் கூற்று

     (இ - ள்.) அடிகள் - அடிகளே!, அருளுமாறு கேண்மோ - அருளிச் செய்தபடி யான்
சிறிது கூறுவல் கேளுங்கோள், இளையகாளை - திவிட்ட நம்பி, யாரும் மருளுமாறு -
அனைவரும் வியக்கும்படி, அரியரசு அதனை - சிங்க அரசாகிய அவ்விலங்கினை,
வாய்பிளந்திட்ட வார்த்தை - வாயைப் பிளந்து கொன்றமையாலுண்டான அப்புகழ் மொழி,
ஒருவன் - ஓர் ஒற்றன், சேணில் வாழ்வார் தெருளும் ஆறு - விஞ்சையருலகத்தே
வாழ்வோர் எல்லாம் தெளிந்து கொள்ளும்படி, கூறக்கேட்டலும் - சொல்லக் கேட்டவுடனே,
உள்ளமெல்லாம் - தத்தம் நெஞ்சம் எல்லாம், வெருளுமாறு வெருளி - அஞ்சும்
எல்லைமுற்றும்படி அஞ்சி, மெய்விதலை கொண்டார் - உடல் நடுக்கமடைந்தனர், ( )

     அடிகள் அருளியவாறே கூறுவல்; இளையகாளை அரிமாவினை அழித்தசெய்தியை
அறிந்த விச்சாதரர் எல்லாம் பெரிதும் அஞ்சி, உடல் நடுங்குவாராயினர் என்றான், என்க.
வெருளுமாறு வெருளி என்றது - அஞ்சுவார் அஞ்சும் அளவும் அஞ்சி என்றபடி.
 

( 5 )


     (பாடம்) 1கேட்க. 2சொல்ல. 3தெல்லாம். 4வெருண்டு மெய் - வெகுண்டு மெய்.