பக்கம் : 9 | | நூல் வந்தவழி | 6. | விஞ்சைக் கிறைவன் விரைசூழ்முடி வேந்தன் மங்கை பஞ்சிக் கனுங்குஞ் சிலம்பாரடிப் பாவை பூவார் வஞ்சிக் கொடிபோல் பவள்காரண மாக வந்த செஞ்சொற் புராணத் துரையின்வழிச் சேறு மன்றே. | (இ - ள்.) விஞ்சைக்கு இறைவன் - மாலி காஞ்சன முதலிய சிறந்த வித்தைகளுக்குத் தலைவனும், விரைசூழ் முடிவேந்தன் - நறுமணங் கமழும் மாலைசுற்றப்பட்ட முடியணிகலன் அணிந்த மன்னனும் ஆகிய சுவலனசடி யினுடைய; மங்கை - மகளும்; பஞ்சிக்கு அனுங்கும் சிலம்பு ஆர் அடிப் பாவை - மெல்லிய பஞ்சின்மீதிடுதற்கும் அஞ்சி வருந்துதற்குக் காரணமான சிலம்பு பொருந்திய மெல்லிய அடியையுடையவளும் கொல்லிப் பாவை போல்பவளும்; பூ ஆர் வஞ்சிக் கொடி போல்பவள் - மலர்கள்நிரம்பிய வஞ்சி என்னும் பூங்கொடி போல்பவளுமாகிய சயம்பவை என்பவள்; காரணமாகவந்த - தலைக்கீடாகத் தோன்றிய; செஞ்சொல் புராணத்து உரையின்வழி - இறைவன் அருளிச்செய்த ‘பிரதமாநுயோகமாபுராணம்‘ என்னும்செவ்விய சொற்களாலியன்ற புராணத்திற் கூறப்பட்ட முறைப்படியே; சேறும் - யாம் இந்நூலின்கண்ணும் கூறிச்செல்வேம், (எ - று.) | | (5) | | |
|
|