பக்கம் எண் :

பக்கம் : 10
 
     விஞ்சை - மாலிகாஞ்சன முதலிய மாயவித்தைகள். விஞ்சை, வித்தியாதரருலகுமாம்.
விஞ்சைக் கிறைவனாகிய சடி என்னும் விரை சூழ் முடிவேந்தன் என விரிப்பினுமாம். விரை
- ஈண்டு மாலைக்கு ஆகுபெயர். மங்கை - ஈண்டுப் பருவப் பெயராகாமல் மகள் என்னும்
முறைப்பெயர்ப் பொருட்டாய் நின்றது. பஞ்சி - பஞ்சு. பஞ்சின்மேலிடற்கும் அஞ்சி
அனுங்குதற்குக் காரணமான அடி என்க. பாவை - கொல்லிப்பாவை; கண்ணுட் பாவையுமாம்
வஞ்சிக்கொடி - வஞ்சி என்னுமொரு பூங்கொடி. சொற்புராணம் என்றது அருகக் கடவுள்
அருளிச்செய்த பிரதமாநுயோக மாபுராணத்தினை. வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவனாற் கூறப்பட்டதாகலின் செஞ்சொற் புராணம் என்றார். எனவே இந்நூற்கு
முதனூல் மாபுராணம் என்றாராயிற்று. இனி இந்நூற்குச் சிரேய தீர்த்தங்கரர் புராணமே
முதனூல் என்பாருமுளர். சீரேய புராணம் - சீபுராணத்தின்கண்ணது. இதனால் இந்நூல்
தோன்றுதற்குரிய முதனூல் உணர்த்தப்பட்டது.

(6)

பாயிரம் முற்றிற்று.

முதலாவது
நாட்டுச் சருக்கம்

     [இச் சருக்கத்தின்கண் சுரமைநாட்டு நான்கு வகைப்பட்ட நிலவளங்களும்,
அவற்றுட்படும் பொருள்கள் தம்முள் மயங்கி நிற்குந் திறமும், நகரங்கள் ஊர்கள்
முதலியவற்றின் சிறப்பும் பிறவும் கூறப் பெறுகின்றன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்
என்னும் நானிலத்துக் கருப்பொருள்களும் மக்களுடைய தொழில் நலங்களும் இனிது
விளக்கப்பெறுகின்றன.]