பக்கம் எண் :


287

     வேடர்கள் தோள்களையும் துடைகளையும் தாள்களையும்
கைகளையும் மூளைகளையும் எற்றி வீழ்வித்தது அப் பன்றி;
பற்களெல்லாம் தென்னம்பாளை காற்றால் உதிர்வனபோல உதிர்ந்தன.
                                                    (54)

 
575. கொலை எடுத்தவேல் எயினர்தம் குருதிநீர் பெருகி
மலை எடுத்துநீண் மரங்களை முறித்தெடுத் தோடிச்
சிலை எடுத்துவீழ் திரைகளும் வலைகளும் வாரி
அலை எடுத்தநீர் வாரியை அணைந்ததை யன்றே.

     (இ - ள்.) கொலை எடுத்த வேல் எயினர்தம் குருதிநீர் பெருகி
- கொலைத்தொழிலில் தேர்ச்சிபெற்ற வேலைப்பிடித்த வேடருடைய
இரத்தம் பெருக்கெடுத்து ஓடி, மலை எடுத்து - மலை முடிகளைத்
தள்ளி, நீள் மரங்களை முறித்து - நீண்ட மரங்களை முறியும்படி செய்து,
எடுத்து ஓடி - தள்ளிக்கொண்டு சென்று, சிலை எடுத்து - வில்லைத்
தள்ளிக்கொண்டு, வீழ் திரைகளும் வலைகளும் வாரி - விரிந்த
திரைகளையும் வலைகளையும் வாரிக்கொண்டு, அலை எடுத்த நீர்
வாரியை அணைந்தது - அலைவீசுகின்ற நீர் நிறைந்த கடலை
அடைந்தது.

     குருதிநீர் பெருகி அங்குள்ள பொருள்களையெல்லாம் இழுத்துக்
கொண்டு கடலிற் போய்க் கலந்தது.
                                                    (55)

 
    வேடன் ஒருவன் மன்னனிடம் கூறுதல்
576. சென்ற சென்றஅத் திசையெலாம் பிணக்குவை செறியக்
கொன்று வீழ்த்திடக் குலைந்ததக் கொடும்படைக் கூட்ட
நின்ற திக்கினை நாடியே நிருடன்முன் னொருவன்
பன்றி ஓடிய விசையினைப் பலமுறை பகர்ந்தான்.

     (இ - ள்.) சென்ற சென்ற அத்திசை யெலாம் - பன்றி சென்ற
திசைகளில் எல்லாம், பிணக்குவை செறிய - பிணக்குவியல் நிறையும் படி,
கொன்று வீழ்த்திட - கொன்று வீழ்த்தியபோது, கொடும் படைக் கூட்டம்
குலைந்தது - கொடிய படைகளின் கூட்டம் நடுங்கிச் சிதறி ஓடியது,
ஒருவன் நிருபன் நின்ற திக்கினை நாடி - ஒரு வீரன் அரசன் இருந்த
திசையைக் கண்டு தேடிச் சென்று, பன்றி ஓடிய விசையினைப் பலமுறை
பகர்ந்தான் - பன்றி ஓடித் திரிகின்ற வேகத்தைப் பலமுறை சொன்னான்.

     இவ்வாறு பன்றி வந்து கொன்று குவித்துத் திரிகின்ற செய்தியை
வேடன் ஒருவன் அரிச்சந்திரனுக்குக் கூறினன்.
                                                    (56)

 
577. அந்த வாசகம் கேட்டரிச் சந்திரன் முனிந்தே
எந்த வாறுவந் தெய்திய திவர்களை வதைத்த
தந்த வாறெது கூறென அரசனை வணங்கி
எந்தை கேளெனா வேடுவன் வகைவகை இசைத்தான்.

     (இ - ள்.) அரிச்சந்திரன் அந்த வாசகம் கேட்டு - அரிச்சந்திரன்
வேடன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு, முனிந்தே - கோபித்து.
எந்தவாறு வந்து எய்தியது - பன்றி எந்தவிதமாக வந்து சேர்ந்தது,
இவர்களை வதைத்தது அந்த வாறு எது - இவர்களைக் கொன்றவிதம்
யாது?, கூறு என - கூறு என்று கேட்க, வேடுவன் அரசனை வணங்கி
- வேடுவன் அரசனை வணங்கி, எந்தை கேள் எனா வகை வகை
இசைத்தான் - எந்தையே கேள் என்றுவகைவகையாகக் கூறினான்.