பக்கம் எண் :


288

அரிச்சந்திரன் பன்றி வந்ததும் கொன்றதும் விளக்கமாய்க் கூறுக என்று
வேடனை வினவ, அவன் விளக்கிக் கூறுவான்.
                                                    (57)

 
578. வானம் ஏழும்மண் ணேழும்முன் மருப்பினால் எடுத்த
ஏன மோபுர மெரித்தவன் உலகெலாம் எரிக்கும்
தானமோ உயிர் துரிசறச் சமனெடும் பன்றி
ஆன தோஅது சிறிதும்யாம் உணர்ந்தில மையா.

     (இ - ள்.) ஐயா - ஐயனே, வானம் ஏழும் மண் ஏழும் -
வானுலகம் ஏழையும் மண்ணுலகம் ஏழையும், முன் மருப்பினால் எடுத்த
- முன் நாளில் தன் கொம்புகளால் தூக்கிய, ஏனமோ - பன்றியோ, புரம்
எரித்தவன் உலகெலாம் எரிக்கும் தானமோ - முப்புரங்களையும் எரித்த
சிவன் உலகங்களெல்லாவற்றையும் எரிக்கும் வல்லமையுள்ளதோ, உயிர்
துரிசு அற -உயிர்கள் குற்றம் இன்றி அழியும்படி, சமன் நெடும் பன்றி
ஆனதோ அது - எமன் நீண்ட பன்றி வடிவம் எடுத்து வந்தனனோ?,
சிறிதும் யாம் உணர்ந்திலம் - சிறிதும் யாம் அறிய வில்லை.

     அப் பன்றி இக்காட்டில் திரியும் பன்றியல்ல; திருமால் எடுத்த
பன்றியுருவோ, சிவபெருமான் எடுத்த உருவமோ, யமன் எடுத்த
உருவமோ என்றான் அவ் வேடன்.
                                                    (58)

 
             பன்றியின் நிறம்
579. தலை நிறம்பச்சை தன்நிறம் பொன்நிறம் தறுகண்
நிலை நிறம்செழு மாமணி குரமிந்த்ர நீலம்
மலை யினும்பெரி தானதொர் வராகம்வந் தெய்திக்
கொலை புரிந்தது கூன்பெருங் கோட்டினால் என்றான்.

     (இ - ள்.) தலை நிறம் பச்சை - தலையின் நிறம் பச்சையாகும்,
தன் நிறம் பொன் நிறம் - அதன் உடல் நிறம் பொன் நிறம், தறுகண்
நிலை நிறம் செழு மா மணி - கொடுமையான கண்ணின் நிலையான
நிறம் சிவப்புநிற மாணிக்கம் போன்றது, குரம் இந்திர நீலம் - குளம்பு
இந்திரநீலக் கல்லின் நிறம் போன்றது, மலையினும் பெரிதானது ஓர்
வராகம் வந்து எய்தி - மலையைக்காட்டினும் பெரிய ஒரு பன்றி வந்து,
கூன் பெருங் கோட்டினால் கொலை புரிந்தது என்றான் - வளைந்த
பெரிய கொம்பினால் கொலை செய்தது என்றான்.

     அப் பன்றி மிகவும் அழகானது; அதன் செயல் மிகவும்
கொடுமையானது என்பது கருத்து.
                                                    (59)