பக்கம் எண் :


 ஸ்ரீ விஹாரச்சருக்கம் 481


 

 1017. மகரவே றிரண்டு தோளால் வாரியுட் டிரிவ தேபோற்
     சிகரமால் யானை யானத் தேவிமார் புயங்க ளாக
     நிகரிலா வின்ப வெள்ளக் கடலிடை நீந்து நாளுட்
     புகரிலார் வானின் வந்திவ் விருவர்க்கும் புதல்வ ரானார்.

     (இ-ள்.) மகரவேறு - ஆண்மகரமஸ்யமானது, இரண்டு தோளால்
- கைகளுக்கொப்பாகி   இரண்டு    பக்கத்துமுள்ள  செட்டைகளால்,
வாரியுள்  -  சமுத்திரத்துள், திரிவதேபோல் - நீந்தித்  திரிவதுபோல,
சிகரம்   -   பர்வதம்போல,   மால்   -  பெரிதாகிய, யானையான் -
யானைகளுக்கதிபனாகிய    அவ்வரசன்,   அத்தேவிமார்  -   அந்த
இருதேவியர்களும்,    புயங்களாக    -     கைகளாக,   நிகரிலா -
உவமையில்லாத,    இன்ப    வெள்ளக்கடலிடை    -     ஸம்ஸார
சௌக்கியமாகிற    பெரிதாகிய    ஸமுத்திரத்திலே,  நீந்துநாளுள் -
நீந்துகின்ற   காலத்தில்,    புகரிலார்   -   குற்றமில்லாதவர்களாகிய
ஆதித்யாபதேவனும்    பவணேந்திர   தேவனும்,  வானின் வந்து -
தேவருலகத்தினின்றும்   ஆயுரவஸானத்து வந்து, இவ்விருவர்க்கும் -
இந்த   இரண்டு  தேவிமார்களுக்கும்,   புதல்வரானார் - புத்திரராகப்
பிறந்தார்கள், எ-று.                                       (7)

 1018. மாலினி தன்க ணாதித் தாபன்மா மேரு வானான்
     பாலன மொழிம திக்கட் பவணன்மந் தரனு மாக
     வேலையைச் செறிந்த வாழி போற்களி சிறந்து வேந்தன்
     ஞாலத்துக் கிடரைத் தீர நடக்குங்கற் பகத்தை யொத்தான்.

     (இ-ள்.)    மாலினி    தன்கண்    -   மேருமாலினியென்னும்
தேவியினிடத்தே,  ஆதித்தாபன் - ஆதித்யாபதேவன், மா - பெருமை
பொருந்திய,    மேருவானான்   -   மேருவென்னும்    பெயருடைய
புதல்வனாகியவதரித்தான்,    (அதன்மேல்),      பாலன    மொழி -
பால்போலினிமையான        வசனத்தையுடைய,        மதிக்கண் -
அமிர்தமதியினிடமாக,  பவணன் - தரணேந்திரன் வந்து, மந்தரனுமாக
- மந்தரனென்னுங் குமரனாகப் பிறக்கவும், வேந்தன் - அரசனானவன்,
வேலையைச்   செறிந்த - பொங்கிக்  கரையில் சேர்ந்த, ஆழிபோல -
ஸமுத்திரம்போல்,  களிசிறந்து - சந்தோஷ மதிகரித்து, ஞாலத்துக்கு -
இப்பூமியில்   யாசகர்களுக்கு,   இடர் - தரித்திர  துன்பமானது, தீர -
நீங்கும்படி, நடக்கும் - செல்கின்ற, கற்பகத்தை - கற்பக விருட்சத்தை,
ஒத்தான் - நிகர்த்தான், எ-று.

     ‘இடரை" என்பதில், ஐ - சாரியை.                       (8)

 1019. மங்கையர் கொங்கை யென்னுங் குவட்டினின் றிழிந்து நல்ல
     சிங்கப்போ தகங்கள் போலத் தவிசிடைத் தவழ்ந்து சென்று
     பங்கயத் தலங்கள் போலும் பவழச்சீ றடியைப் பாரா
     மங்கைதன் சென்னி சூட்டி நடந்திட்டார் மாலை யாக.