பக்கம் எண் :


480மேருமந்தர புராணம்  


 

செய்யுந்தன்மையுடையார்,   வாமம்  -  அழகிய,  மேகலையினாரே -
மேகலாபரண மணிந்த ஸ்த்ரீகளே (வேறு வசியமில்லை), எ-று.     (4)

 1015. சினந்தலை நின்ற வேந்தர் திண்புயஞ் சிதைத்த வீரத்
     தனந்தவீ ரியனென் பானா மந்நகர்க் கிறைவ னல்லார்
     மனந்தொறு மிருந்த காமன் வண்மையான் மாரி யொப்பா
     னனந்தலை யுலகி னுள்ள நவையெலாந் தீர நின்றான்.

     (இ-ள்.)   அந்நகர்க்கு   -   அப்பட்டணத்திற்கு,  இறைவன் -
அரசனானவன்,  சினந்தலை  நின்ற - கோபத்தில் மிகுதிபெற்று நின்ற,
வேந்தர்  -   சத்துரு ராஜாக்களுடைய, திண் - கெட்டியாகிய, புயம் -
புஜபலங்களை    யெல்லாம்,   சிதைத்த   -    கெடுத்த,  வீரத்து -
பராக்கிரமத்தினால்,    அனந்த    வீரியனென்பானாம்  -   அனந்த
வீரியனென்னும்      பெயருடையவனாவன்,    (இவன்),   நல்லார் -
ஸ்த்ரீமார்களுடைய,   மனந்தொறும் - மனங்கள்   தோறும், இருந்த -
இருக்கின்ற,   காமன்   -   மன்மதனுக்கொப்பான  லாவண்யனாவன்,
வண்மையால் - த்யாகம் கொடுக்கின்ற கையின் வளப்பத்தினால், மாரி
யொப்பான்  -  மேகத்தை    யொப்பவனாவான், நனந்தலையுலகின் -
விசாலித்த  இந்த  மத்திம  லோகத்திலே,  உள்ள - இராநின்ற தனது
ராஜ்யத்தில்,    நவையெலாம்    -    வருத்தங்களெல்லாம்,   தீர -
நீங்கும்படியாக,   நின்றான்   -   செங்கோலோச்சி  அரசு செலுத்தி
நிலைபெற்றிருந்தான், எ-று.                                 (5)

 1016. பாரிசா தத்தைச் சார்ந்த பவழத்தின் கொழுந்தை யொப்பாண்
     மேருமா லினியென் பாளவ் வேந்தன்மா தேவி மிக்காள்
     வாரிவா யமிர்த மன்னா ளமிர்தமா மதியென் பாளாங்
     காரொன்றோ டிரண்டு மின்போற் காவலற் கழுமி நின்றார்.

     (இ-ள்.)   அவ்வேந்தன்  -  அவ்வரசனது,  மாதேவி - சிறந்த
பட்டத்தேவிகளாக, மிக்காள் - மிகு குணமுடையவளும், பாரிசாதத்தை
- கற்பக   விருட்சத்தை,   சார்ந்த - சேர்ந்த, பவழத்தின் கொழுந்தை
யொப்பாள்  -  பவழக்கொடிக் கொப்பவளும், (ஆகிய), மேருமாலினி
யென்பாள்   -   மேருமாலினி    யென்பவளும்,    வாரி   வாய் -
க்ஷீரஸமுத்திரத்திலுண்டாகிய,    அமிர்தமன்னாள்   - அமிர்தத்துக்கு
ஒப்பவளான,   அமிர்தமாமதி   யென்பாள்   -   சிறந்த அமிர்தமதி
யென்பவளும்,   ஆம்  -  உண்டாகிய,   காரொன்றோடு   -  ஒரு
மேகத்தோடு,   இரண்டு   மின்போல் - இரண்டு  மின்னற் கொடிகள்
சேர்ந்திருக்கின்றதுபோல,    காவலன்   -   அவ்வரசனை,  கழுமி -
பொருந்தி,    நின்றார்    -    நிலைபெற்றிருந்தார்கள்,  (அதாவது :
மேருமாலினி    முதல்     மனைவியாயும்,   அமிர்தமதி   இரண்டா
மனைவியாயும் அவ்வரசனைச் சேர்ந்திருந்தார்கள்), எ-று.         (6)