பக்கம் எண் :


101


புராண வரலாற்றுப் படலம்

நைமிசாரணியச் சிறப்பு

எழுசீரடி யாசிரிய விருத்தம்

     மிடல்கெழு தவத்தோர் வேள்விசெய் வினைக்கு வேண்டிய
வேண்டியாங் குதவக், கடவுளான் பயிலுங் காட்சியால் அவிஊண்கைக்
கொளத் துதைந்தவா னவரால், தொடர்வுறும் ஓமப் புகை தழீஇச்
சுரும்பர் உளர்தராப் பன்மலர்ப் பொழிலால், அடர்தருங் காமர் கற்பக
வனமே யாயது நைமிசா ரணியம்.                           1

     வலிமை பொருந்திய தவத்தையுடையவர் யாகம்செய்தற்கு வேண்டிய
பொருள்களை வேண்டியவாறே உதவும் காமதேனுவையும், அவிபெறக் குழீஇய
தேவரையும் தன்னுட் கொண்டமையாலும், வேள்விப் புகையால் வண்டுகள்
சஞ்சரியாத சோலைகளை உடைமையாலும், நைமிசவனம் அழகிய கற்பகச்
சோலையே ஆயது.

     வேண்டிய வேண்டியாங்கு உதவுவது தவம்: (திருக்குறள் - 265,
தவத்தவர்க்கு யானைகள் ஏவல் செய்தல்: ‘‘கான் யானை தந்த விறகில்”
கடுந்தெறல் செந்தீ வேட்டு” (புறநா. 251 5-6), ‘‘செந்தீப் பேணிய முனிவர்
வெண்கோட்டுக், களிறு தருவிறகின் வேட்கும்” (பெரும்: 498-499)

     தாதவிழ் கடுக்கை நறுந்தொடை மிலைச்சுந் தம்பிரான் அடியல
துணரா, மாதவர் இயற்று மகவினை சிதைப்ப வருகருந் தயித்தியர்
அவர்தங், காதுவெஞ் சாப வலிக்குடைந் தோடுங் காட்சியே
கடுக்கும்அம் மகத்தீ, மீதுயர்ந் தண்டச் சுவர்த்தலம் உரிஞ்ச
விசும்பெழு நறும்புகைப் படலை.                          2

     வேள்வித் தீயினின்றெழுந்து அண்டப்பித்திகையில் உராய்கின்ற
புகைப்படலம், நறுமணங்கமழும் கொன்றை மலர்மாலையைச் சூடுகின்ற
உயிர்களுக்குத் தலைவனாகிய சிவபெருமான் திருவடிகளை அன்றிப் பிறி
துணராத் பெருந்தவர் இயல்பாகச் செய்யும் யாகத்தைக் கெடுக்க வரும்
கரிய அசுரர் அத்தவத்தோர் இடுங் கொடிய வெஞ்சாப வலிமைக்குப்
புறமுதுகிட்டோடுங் காட்சியை ஒக்கும்.

     முனிவர் வேள்வியை அசுரர் அழித்தலை தாடகைவதை முதலியவற்றுட்
காண்க.

     கருந்திரை அளக்கர் அகடுடைத் தெழுந்து கனையிருள்
பருகுவெங் கதிரோன், இருந்தவர் வேள்விக் களத்தவிப் பாகம்
ஏற்பவந் தணுகுவோன் மான, மருந்தெனக் கிளைத்து வானுற நிவந்த
வளம் பொழில் கிளைகளைக் கரத்தால், திருந்துற ஒதுக்கிக் குனிந்துபுக்
குலாவிச் சேணிடைப் போய்நிமிர்ந் துறுமால்.                  3