பக்கம் எண் :


102காஞ்சிப் புராணம்


     வெள்ளிய அலைகளையுடைய கரிய கடலின் வயிற்றை (நடு)க்
கிழித்தெழுந்து செறிந்த இருளைப் பருகும் சூரியன், பெருந்தவ முடையோர்
வேள்வியில் தனக்குரிய அவியை ஏற்றுக்கொள்ள அணுகுவோனைப் போலத்,
தளிர், இலை, பூ, காய், கனி இவற்றால் நோய்க்கு மருந்துபோலத் தழைத்து
வானில் தோய உயர்ந்த வளமுடைய சோலையின் கிளைகளைக் கிரணக்
கரங்களால் செவ்வனே ஒதுக்கி வளைந்து உள்புகுந்து உலாவி நெடுந்
தொலைவிற் போய் உயர்த்தோங்கும்.

     தளிர், இலை, பூ, காய், கனி முதலிய பலவும் மருந்தாய்ப் பயன் தரல்:
‘‘மருந்தாகித் தப்பா மரம்” (திருக்: 217)

     சிறகர்வண் டிமிரும் வட்டவாய்க் கமலச் செழும்பொகுட் டரசுவீற்
றிருக்கும், மறைமுதற் கிழவன் முனிவரர் வேண்ட வளைத்தனன்
விடுத்தபுல் நேமி, இறவுறா தின்றும் ஆயிடை உறைவ தெனக்கவின்
காட்டிடுந் தேத்தீ, அறைதரச் செறிந்து நறவம்ஊற் றெடுக்கும்
அரும்பெறல் மதுவிறால் வலயம்.                           4

     பிரமன், முனிவரர் விருப்பம் நிறைவெய்தத் தருப்பைப் புல்லால்
அமைத்து விடுத்த சக்கரம் அழியாது இன்றும், அவண் பொருந்தி உளவெனத்
தேனீக்கள் ஒலிக்கும்படி பெருகித்தேன் ஊற்றெடுத்துப் பாயும் தேனடையாகிய
வட்டங்கள் அழகு செய்யும்.

     பொகுட்டு-தாமரைக்கொட்டை. தேத்து-தேனீ. பெறல் அருமது: தேன்-
பிறரால் சிருட்டிக்க இயலாதது.

     விரும்பிய இடபந் தாங்குதோற் றத்தால் விளங்கெரி உருவினிற்
பூத்த, வரும்பணி கொண்ட காட்சியாற் பெரிய வரையவண் இருந்தவ
ராக, இரும்புவி உய்யக் கோடலால் யாரும் ஏத்திடும் பெற்றியால்
உலவாப், பெரும்பெயர்க் கயிலைக் கடவுளே போலும் பிறங்கொளி
நைமிசக் கானம்.                                        5

     விரும்பிய இடபம் ஊர்தியாகத் தாங்குகின்ற காட்சியானும், விளங்குகின்ற
தீயை ஒத்த வடிவினில் பொலிகின்ற அரிய பாம்புகளை அணியாகக் கொண்ட
தோற்றத்தினாலும், மகாமேருமலை அவ்விடத்துப் பெரிய வில்லாகப்
பெரும்புவியிலுள்ளவரை முப்புரரிடத்தினின்றும் உய்யக் கொள்ளுதலினானும்,
யாவரும் துதிக்கும் இயல்பினாலும், கெடாத மகா வாக்கியத்தின் பொருளாய்
விளங்கும் கயிலைமலைத் தலைவனையே ஒக்கும் விளங்குகின்ற ஒளியுடைய
நைமிசாரணியம்.

     (வே-ள்) இடப ராசியைத் தாங்கும் தோற்றத்தாலும், தீயின் நிறத்தை
ஒத்த நிறமுடைய அரும்புகளைக் கொண்ட காட்சியாலும், பெருமக்களை
அவ்வனத்தில் பெரிய தவசிகளாகக் கொண்டு உலக மக்களை உய்யக்
கொள்ளுதலாலும், யாவரும் போற்றும் இயல்பினாலும் சிவபிரானுக்கும்,
நைமிசவனத்திற்கும் சொல்லொப்புமையால் முடித்தார். வரும் இரு
செய்யுட்களில் வனத்திற்கும் திருமால்பிரமர்க்கும் சொல்லொப்புமையால்
முடித்துக் காட்டுவர்.