எவற்றினுக்கும் மிக்கது எனத் தெளிவாயாக. அவ்விடத்தில் வழிபாடு செய்து ஒருநாளேனும் விரும்பித் தங்கினால் முத்தி நிலையைப் பெறுதல் கைகூடும். வழிச்செலவிற் புகுந்தேனும் மறந்தேனும் பொருளாசை மருவி யேனும், கழிப்பருஞ்சீர்க் காஞ்சியினிற் கணப்பொழுது வதிந்தோருங் கலப்பர் முத்தி, பழிப்பிலாக் காஞ்சியெனத் தன்னியல்பான் ஒருபொழுது பகரிற் கண்ணில், ஒழிப்பரும்பா தகமனைத்தும் ஒழிந்துபெருந் துறக்கவீ டுறுதல் உண்மை 20 வேற்றூர்க்கு அத்தலத்தின் வழியாகச் சென்றேனும், அறிவு சோர்ந்தேனும், பொருளீட்டு முயற்சியாலேனும், நீங்காத சிறப்பினையுடைய காஞ்சிபுரத்தில் கணநேரம் வசித்தவரும் முத்தியில் இரண்டறக் கலப்பர். புகழமைந்த காஞ்சி எனத் தன் முயற்சியின்றி (அபுத்தி பூர்வமாக) ஓர் கால் சொன்னாலும், ஓர் முறை எண்ணினாலும் கழுவாயில்லாத பெரும் பாவங்கள் யாவும் அனுபவியாது கழிந்து சுவர்க்கமும், முத்தியும் எய்துதல் சத்தியமாகும். அக்காஞ்சி கலிநாசப் பொருட்டுநாம் படைத்துவைத்த தாதலாலே, எக்காலும் அந்நகரின் அகத்துயரும் வினைத்துயரும் எய்தாவாகும், மைக்காளஞ் சுவைஅமிழ்தின் மணந்தவிழி மணிநீவி அல்குல் எட்டுத், திக்காளர் தமைப்பொதியும் பெருங்கீர்த்தி நகரவளஞ் சிறிது கேட்டி. 21 அக்காஞ்சியைக் கலியுகத்தில் நேரும் கொடுமை நீங்கும்படி நாமே படைத்தது; ஆதலால், எக்காலத்தும் அந்நகரிடத்தில் இடத்தான் வரு துன்பமும், தீவினையான் வருதுன்பமும் வந்து அங்கு வாழ்வாரை வாதியா ஆகும். கரிய விடமும், சுவையுடை அமிழ்தமும் கலந்த விழியையும் மேகலையும், கொய்சகமும் கொண்ட அல்குலையுமுடையோய்! நகர வளத்தினைச் சிறிது கேட்டிடுதி. கலிமுதல்தீங் கணுகரிய வேலியெனச் சூழ்பொழிலுங் காவல்மாறா, நிலையுடையுட் சேனையெனக் குவளைவிழி நந்தனநீள் வனமுந்தேவ, குலநிறைபஃ றீபமென நிரைக்கமலக் குளிர்தடமுங் கயிலை தன்னில், இலகுறுபல் குவடென்னப் பலதளியும் உடைத்தாகும் எறிநீர்க் காஞ்சி. 22 பசி, பிணி, பகை முதலிய தீங்கு அணுகுவதற்கு இடங்கொடாத வேலிபோலச் சூழ்ந்த சோலையும், காவலினின்றும் நீங்காமல் நிற்கும் நிலையையுடைய அந்தரங்கத்தில் வைத்த சேனையைப்போலப் பேரெண் அளவினதாகிய விழியென நீண்ட நந்தன வனமும், பலதீபம் ஏற்றிய கோயிலை ஒப்ப நிரம்பிய தாமரை மலர்களையுடைய குளிர்ந்த பொய்கையும், கயிலை மலையில் விளங்குகின்ற பல சிகரங்கள் ஒப்பப் பல கோயில்களையும் அலை வீசுகின்ற நீர்நிலைகளைக் கொண்ட காஞ்சி யுடையதாகும். குவளை-பேரெண்; நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்...நுதலிய செய்குறி யீட்டம் (பரிபா. 2-13) |