பக்கம் எண் :


தலவிசேடப் படலம் 139


     செல்வீ! அந்தப் பிரமபுரம் காஞ்சி நகரமே அன்றி வேறில்லை
யாகும் என்றே பேசப்பெறும் உபநிடதங்கள் யாவும் சிவாகமங்களோடு
எடுத்துக் கூறும். இந்தத் தலத்தினை ஒருவன் நெடுந்தொலைவிலிருந்தாயினும்,
அத்தலத்திலிருந்தாயினும் கருதினாலும், வணங்கினாலும் எவற்றாலும் நீங்காத
பெரிய பாவங்களும் நீங்கி வீடுபேறடைவன் உனக்குண்மையை
உணர்த்தினோம்.

     என்றிறைவன் உலகுய்ய வினாவுமலைப் பெருமாட்டிக் கியம்பும்
வாய்மை, அன்றுவினா வியசனற்கு மாரனுக்குத் திருநந்தி உரைத்தான்
அன்னோன், வென்றபொறி வாதரா யணற்குரைப்ப அவனெனக்கு
விளம்பல் செய்தான், குன்றனைய பெருந்தவத்தீர் சிவனைக்காண்
பதற்கேது இதுவே கொண்மின்.                           30

     என்று உயிர்கள் கடைத்தேற வினாவும் இமாசலன் பயந்த
உமையம்மையார்க்குக் கூறும் சத்திய மொழியை அந்நாள் வினாவிய
சனற்குமார முனிவர்க்குத் திருநந்திதேவர் உபதேசம் செய்தனர். அம்முனிவர்
அதனை ஐம்பொறிகளையும் தவத்தால் வென்ற வியாச முனிவர்க்குக் கூற
அவர் தம் மாணவராகிய (சூதபுராணிகர்) எனக்கு விரித்துரைத்தனர்.
மலையனைய மாதவமுடையீர்! சிவபெருமானைக் காணுதற்கு உரிய எளிய
உபாயம் இதுவே. இதனை உறுதியாகக் கைக்கொள்ளுங்கள்.

நூற்பயன்

     பரவரும்மந் தணமாகும் இக்காதை மெய்யன்பிற் படிப்போர்
கேட்போர், கரிசுறுநோய் நீங்கிநெடு நாட்புவியின் மக்களொடுங்
களித்து வாழ்ந்து, வரகுணராய் மறுமையினும் பெரும்போகம்
இனிதுண்டு மாறா முத்தி, விரவுவர்என் றுளங்கொள்ளச் சூதமுனி
முனிவரர்க்கு விளம்பி னானால்.                         31

     சொல்லுதற்கரிய மறையாகும் இவ்வரலாற்றை உண்மை அன்பொடும்
கற்போரும், கேட்போரும், குற்றம் மிக்க நோய் நீங்கி நீண்ட காலம் பூமியில்
மக்களொடும் மகிழ்ந்து வாழ்ந்து மேலான குணத்தராய்ப் பின்வரு பிறப்பினும்
பெரும்போகம் நுகர்ந்து அழியாத முத்தியிற் கலப்பர் என்று மனம் ஏன்று
கொள்ளும் வகையில் சூத முனிவரர் ஏனைய முனிவரர்களுக்கு
எடுத்துரைத்தனர்.

தலவிசேடப்படலம் முற்றுப் பெற்றது.

ஆகத் திருவிருத்தம் 444