தந்தைதாய் இரண்டொழியப் பிறவெலாங் கொளத்தகும்ஆ வணங்கள் மல்கும், எந்தஊர் வேதவே தாந்தங்கள் மூவுலகும் எடுத்துக் கூறும், அந்தஊ ரெனக்கோடி மடமயிலே கவ்வென்ப தயன்பே ரென்ன, முந்தும் இருக்கோதும்அஞ்சென் பகுதி அடைவொடு பூசை மொழியும் மாதோ. 26 மடப்பத்தை யுடைய மயிலே, தந்தை தாயர் இருவர் தவிரப் பிற யாவும் விலைக்குக் கொள்ளத் தகும் கடைவீதிகள் நிறைந்த ஊர் எந்த ஊரோ வேதங்களும், வேத சிரசுகளும் மூன்றுலகங்களும் உயர்த்துக் கூறும் அந்த ஊரென்று கொள்வாய்; ‘க’ என்பது பிரமன் பேரென்று முன்னிற்கும் இருக்குவேதம் கூறா நிற்கும்; அஞ்ச் என்னும் பகுதி முறையோடு பூசனைமொழியும். க+அஞ்ச்=காஞ்சி திசைமுகனால் அஞ்சிக்கப் படுதலினால் காஞ்சியெனத் திசை போய் மல்கும், இசையுடைய திதுபிரம லோகமென்றும் இதனாற்பேர் எய்து மாற்றான், அசைவிலா தங்குறைவோர் எல்லோர்க்கும் வீடுதவும் அவ்வூர் நாப்பண், வசைஇன்றித் திப்பியமாய்ப் புண்டரிகம் போல்எமக்கு வயங்குங் கோயில். 27 இத்தலம் நான் முகனால் பூசிக்கப் படுதலின் காஞ்சி யெனப் பேர் பெற்றுத் திசைதொறும் பரந்து நிறைந்த புகழை யுடையது; பிரமலோக மென்றும் இக் காரணத்தால் பேர் பெற்றமையால் அவ்விடத்தினின்றும் நீங்காது அங்கு வாழ்வோர் யாவர்க்கும் வீட்டினை வழங்கும் அவ்வூரின் நடுவில் பழிப்பின்றித் தெய்வத் தன்மையுடையதாய்த் தாமரை மலரைப் போல எமக்குக் கோயில் விளங்கும். அங்கதனிற் சோதிலிங்க வடிவாகி யாம்என்றும் அமர்வேம் இவ்வா, றிங்கிரண்டாம் மறைவிளம்பும் சந்தோகா மறைஎம்மை ஒளிவான் என்னும், துங்கநகர் தனைப்பிரம புரமென்னும் இறுதி மறை சுவர்க்க மென்னும், பங்கமறு தயித்திரியஞ் சோதிசூழ் சுவர்க்கமெனப் பகரா நிற்கும். 28 அத்திருநகரில் யாம் ஒளி வாய்ந்த சிவலிங்க வடிவம் கொண்டு என்றும் விரும்பி வீற்றிருப்போம்; இவ்வகையாக இங்கு இரண்டாம் வேதமாகிய யசுர்வேதம் கூறாநிற்கும்; சாந்தோக்கிய உபநிடதம் எம்மை சிதாகாசப் பெருவெளி எனக்கூறும்; அவ்வுபநிடதமே அந்த உயர்ச்சி வாய்ந்த திருநகரைப் பிரமபுரமென்று கூறும். அதர்வ வேதம் சுவர்க்கம் என்று கூறும், குற்றமற்ற தைத்திரியம் ஒளிமிக்க சுவர்க்கமெனவும் கூறாநிற்கும். அப்பிரம புரங்காஞ்சி நகரல்லால் வேறில்லை யாகும் என்றே, செப்பும்உப நிடதமெலாஞ் சிவாகமங்க ளொடுமுழங்குஞ் செல்வீ இந்த, வைப்பினைச்சே யிடையானும் ஆயிடையா யினும்இருந்து வணங்கிற் கண்ணில், எப்பெரும்பா வமும்நீங்கி வீடெய்தும் உனக்குண்மை இயம்பி னேமால். 29 |