பக்கம் எண் :


திருநெறிக்காரைக்காட்டுப்படலம் 141


     புகல் இந்நகரில் என மாற்றுக. ஆவுடையாள் எனினும் பொதுவினில்
தீர்த்துத் தன்னை அடிமை கொண்டவள் என்றனர்.

     மாடு - செல்வம்; பெருமாட்டி - பெருஞ்செல்வி.

சத்திய சத்தியர் சத்திய சோதகர் சத்திய சங்கற்பர்
சத்திய காமர் இருத்தலின் அப்பதி சத்திய விரதமதாம்
சத்திய நன்னெறி யார்க்கும் விரைந்தருள் செய்துறு தானமதிற்
சத்திய மாவிர தத்தடம் ஒன்றுள தத்தட நீராடி.           4

     நிலைபேறுடைய திருவருளைச் சத்தியாக வுடையவர், நிலைபெற்ற
செயலர், நிலைபெற்ற அறிவினர், நிலைபெற்ற இச்சையர் இருத்தலினால்,
அவ்விடம் சத்திய விரதம் ஆகும். நிலைத்த ஞானத்தைச் சேர்வார்
யாவர்க்கும் விரைந்து அருளுதற் கிடனாகிய அத்தலத்திற் சத்தியமா விரதப்
பொய்கையில் நீர் மூழ்கி.

     தாதான்மிய சத்தியாகிய திருவருளொடு விளங்குபவர். அறிவிச்சை
செயல்களால் திரிவு படாதவர். (அயரா அன்பின் அரன் கழல் செலுமே’
(அயராமை - அறிவென்றனர் ஆசிரியர்) சங்கற்பம் - நினைவு; ஆவது
அறிவு. விரதம் - கொள்கை.

புதனமர் நாளினில் நீர்க்கட னாதி பொருந்த முடித்தங்கண்
இதமுறு சத்திய மாவிர தீசரை ஏத்தி வணங்குநர் தாம்
கதவினை தீர்த்தருள் உண்மை உணர்ந்து கலப்பர்கள் முத்தியினை
மதமுறு காம மயக்கம் அனைத்தும் அறுத்துயர் முனிவீர்காள்.   5

     புதன் கிழமையில் தருப்பணம் முதலிய சிரத்தையுடன் முற்றுப் பெறச்
செய்து அத்தலத்தில் பேரின்பம் உடைய சத்தியமா விரதீசரைத் துதித்துத்
தொழுவோர் தங்கள் கொடிய வினை தவிர்ந்து திருவருளால் உண்மையை
உணர்ந்து முத்தியினைத் தலைப்படுவர். செருக்கை மிகுவிக்கின்ற காமம்
வெகுளி மயக்கம் இம்மூன்றனையும் வேரொடும் களைந்தமையால் உயர்ந்த
முனிவர்களே!

     இனம்பற்றி வெகுளியையும் கொள்க. அனைத்தும் எனவே வேரொடும்
என்க. முக்குறும்பு அறுத்தமையால் உயர்ந்த என்க.

மனைவியர் மக்கள் நிலங்கலை செல்வமும் மற்றவை வேண்டிடினும்
அனையவை முற்றும் அளித்துயர் வீடும் அளித்திடும் அத்தீர்த்தம்
இனைய தடம்பதி இந்திர தீர்த்தமும் இந்திர புரமுமெனப்
புனைபெய ரும்பெறும் அப்பெயர் எய்திய காரண மும்புகல்வேன். 6

     மனைவி, மக்கள், நிலம், கல்வி, செல்வம் மற்றும் உள்ள எப்பொருளை
விரும்பி மூழ்கினும் அத்தீர்த்தம் அவற்றை முழுதும் அளித்து மேலும்
வீட்டின்பமும் நல்கும். இத்தன்மையுடைய தடமும் பதியும் முறையே இந்திர
தீர்த்தமும், இந்திர புரமும் எனக்காரணச் சிறப்புப் பெயரும்பெறும். அவை
அப்பெயர் பெற்ற காரணத்தையும் சொல்வேன்.