இந்திரன் அரசிருக்கை மதுமல ராளிதன் மேதகு கற்பம் வராகம துறும் ஆறாம் முதுமனு வந்தர நர்ட்சிவி என்றொரு வாசவன் முன்னுளனால் விதுவினை ஒப்பன் அரம்பைய ராகிய மென்குமு தங்களிடைப் பொதுவறு தானவ மாக்கடலுக்கு வடாதெரி கனல்போல்வான். 7 | மேன்மை பொருந்திய பிரமனுடைய சுவேத வராக கற்பம் ஆறாம் மனுவந்தர நாளில் சிவி என்னும் பெயர் கொண்ட இந்திரன் முன் இருந்தனன். அவன் தேவ மகளிர் குழாமாகிய மெல்லிய அல்லி மலர்களுக்குச் சந்திரனை ஒத்து விளங்குவன்; பொதுமை நீங்கிய சிறப்பினையுடைய அசுரக் கடலுக்கு வடவா முகாக்கினியை ஒப்பன். போகமும், வேகமும் ஒருங்குடையன. கடவுளர் சேனைப் பங்கய பானு கற்சிறை அரிவயிரப் படையவன் ஓர்நாட் கடவுள் அவைக்கட் பாசிழை வெதிர்பொரு தோள் படவர வல்குற் சசிபுடை மேவப் பன்மணி அரியணைமேல் வடிவ மடங்கல் மேலோர் மடங்கல் போன்மென வைகினனால். 8 | தேவர் சேனையாகிய தாமரைக்குச் சூரியனும், மலைகளின் சிறகுகளை அரிந்த வச்சிரப் படையை யுடையவனுமாகிய இந்திரன் ஓர் நாள் தேவ சபையில் பசிய பொன் அணிகளையும், மூங்கில் ஒத்த தோளினையும் பாம்பினது படம் அனைய அல்குலையும் உடைய இந்திராணி மருங்கிருப்பப் பல மணிகள் பதித்த சிங்காசனத்தின் மேல் வடிவுடைய சிங்கத்தின் மேலோர் (ஆற்றலாற்) சிங்கம்போலுமென வீற்றிருந்தனன். சிங்கமென இருத்தல்: சனற்குமாரப் படலம் 12-ஆம் செய்யுளை நோக்குக. இந்திரனைச் சோமன், சூரியன், அக்கினி எனக் காட்டியது நயம். குமுதம், கடல், பங்கயம் இவைகள் அளவைக் குறிப்பனவும் நயமுடையன. இருபுடை வெண்கவ ரித்தொகை துள்ள மிசைக்குடை எழில்செய்ய விருதுகள் மாகதர் சூதர் முழக்க வியன்மணி மாநிதியைந் தருவொடு தேனு விழிக்கடை நோக்கினை நோக்குபு தலைநிற்ப அருகுறு கின்னரர் யாழ்அமிர் தஞ்செவி ஆர விருந்தயர. 9 | இருமருங்கும் வெண்சாமரைத் தொகை எழவும், விழவும் ஆகத் துள்ளவும், மேலே குடை அழகு செய்யவும், கீர்த்திகளை இருந்தேத்து வோரும், நின்றேத்துவோரும் எடுத்துப் போற்றவும் சிந்தாமணி, சங்கநிதி, பதுமநிதி, ஐந்தரு, காமதேனு எனப்பெறும் இவை கோமகன் குறிப்பறிந்து நல்கக் கடைக்கண் பார்வையை நோக்கித் தத்தம் செயலின் முனைத்து நிற்கவும், கின்னரராகிய யாழ்வல்லோர் இசை அமிழ்தம் செவி நிரம்ப விருந்து செய்யவும், ஐந்தரு ஆவன: சந்தானம், அரிசந்தனம், மந்தாரம், பாரிசாதம், கற்பகம் என்பன. ஐந்தருவும், பிறவும் தெய்வத்தன்மையால் வேண்டியோர்க்கு வேண்டுவ உதவும். |