பக்கம் எண் :


திருநெறிக்காரைக்காட்டுப்படலம் 143


மணங்கமழ் தோளணி கற்பக மாலை துளித்த மதுப்புனல்பாய்ந்
துணங்கரும் இன்ப விழிப்புனல் ஒப்ப உறைத்து விழிக்கெல்லாம்
அணங்கு புரிந்திடல் கண்டு புலர்த்துநர் போல் அவிர் சாந்தாற்றி
நுணங்கிடை மங்கையர் ஓவற எங்கணும் நொய்தின் அசைத்தணுக.

      தோளில் அணிந்துள்ள நறுமணம் வீசும் கற்பக மாலை துளிபடச்
சிதறிய தேனாகிய நீர் பாய்ந்து வற்றாத இன்பக் (உவகைக் கண்ணீர்)
கண்ணீர் போலத் துளித்து ஆயிரங் கண்களினும் வருத்துதலைக் கண்டு
உலர்த்துநரைப் போல விளங்குகின்ற சிவிறி கொண்டு நுண்ணிய
இடையினையுடைய தேவமகளிர் நீக்கமற எவ்விடத்தும் வீசி நெருங்கவும்.

அரம்பை உருப்பசி மேனகை முதலிய அரிமாதர் விழிமடவார்
நிரம்பிய காம நலங்கனி அவிநய நெறிமுறை கரம்அசையப்
பரம்பு மிடற்றிசை விம்மிட விழிஇணை புடைபெயர் பயில்வினொடும்
வரம்பெறும் அற்புத மின்னவிர் கொடியென மகிழ்நடம் எதிர்புரிய.

     அரம்பை, உருப்பசி மேனகை முதலிய செவ்வரியும், களிப்பும்
பொருந்திய கண்களையுடைய மாதர் நிரம்பிய காம இன்பம் பெருகுதற்குக்
காரணமான பரத சாத்திர முறை பிறழாது கரங்கள் அசையவும், பரவிய
கண்டப்பாடல் எழவும் இருவிழிகள் பிறழ்தலுடன் மேன்மை பெறும்.

     வியப்புடைய ஒளி விளங்குகின்ற திவளுதலாற் பூங்கொடி என மகிழ்
நிருத்தம் ஏற்பப் புரியவும்,

மருத்துவர் வானவர் கின்னரர் சித்தர் வசுக்கள் மருத்துக்கள்
உருத்திரர் சாத்தியர் கந்தரு வத்தர் உடுக்கள் நவக்கோள்கள்
திருக்கிளர் மெய்த்தவர் யோகிகள் கைஇணை சென்னி மிசைக்குவியா
நெருக்கினுள் எய்தி இறைஞ்சி மருங்குற நிரல்பட நிற்பவரோ.    12

     மருத்துவர், வானவர் முதலானோர் சிரமேல் இரு கைகளையும் குவித்து
நெருக்கத்துள் வணங்கி வரிசையில் நிற்பர்.

கணங்கொள் தயித்தியர் யாவரும் வந்து கடைத்தலை வாய்தலின்மாட்
டுணங்குபு செவ்வி கிடைத்திலர் நிற்ப ஒழிந்தவர் தங்குறைத்தீர்த்
தணங்கரும் இன்பவெள் ளத்தில் அழுந்தி அளப்பரு செல்வத்தான்
இணங்கலர் கோளரி இன்னணம் மேவுழி எண்ணினன் இவையெல்லாம்.

     கூட்டமுடைய அசுரர் யாவரும் கடை வாயிலில் காலம் பெறாது வாடி
நிற்ப ஏனையோர் தங்குறை தீர்த்துத் துன்பு நீங்கிய இன்ப வெள்ளத்துள்
மூழ்கி அளக்கலாகாத செல்வத்தினாலே பகைவர்க்குச் சிங்கம் ஆவான்
இங்ஙனம் இருக்கையில் இவையெல்லாம் எண்ணினான்.