இந்திரன் அரசியலை வெறுத்தல் மேற்படி வேறு இருவினை ஒப்பு வாய்ந்த பருவம்வந் தெய்தலாலே மருவருந் துறக்க வைப்பின் அரசியல் வாழ்க்கை தன்னை அருவருத் துவர்த்துக் காவற் சிறையிடை அகப்பட் டோரின் வெருவரும் பதைக்கும் அஞ்சும் வேறிவை கருத்துட் கொள்வான். | இன்ப துன்பங்கள் இரண்டனையும் ஒப்பு நோக்கி, அவற்றிற்பற்று விடும் காலம் வந்தடைதலாலே, அடைதற்கரிய விண்ணுலக அரசியல் வாழ்வைக் கூசி வெறுத்துக் காவலாகிய சிறைக் கூடத்தில் அகப்பட்டோரைப்போல வெருவினான்; பதைத்தான்; அஞ்சினான்; வேறாய இவற்றைக் கருதினான். வெருவல், பதைத்தல், அஞ்சுதல் - அச்சத்தின் படி முறைகள், அழியும்இவ் விடய வாழ்விற் களித்திருந் தந்தோ கெட்டேன் பழிபவக் கடலிற் பாந்தள்வாய்க் கிடந்தும் நாணேன் வழிமுறை அறியா மாய வல்லிருட் படுகர்ச் சேற்றுள் இழியும்ஊர்ப் பன்றி யேபோல் உழந்தஎன் அறிவு நன்றால். 15 | நிலை நில்லாது அழியும் இந்த விடய சுகங்களில் மகிழ்ச்சி மிக்கு ஐயோ கெட்டேன்; பழிக்கப்படுகின்ற பிறவியாகிய கடலில் காலமென்னும் பாம்பின் வாய்க்கிடந்தும் நாணிலேன்; பிழைக்கும் வழி முறைகளை அறியவிடாது வஞ்சமும் வன்மையும் அமைந்த இருளில் பள்ளத்துட் பட்டசேற்றில் இழிந்துறும் ஊர்ப்பன்றியைப் போலத் துன்புற்றழிந்த என்னுடைய அறிவு நன்று. நன்று அன்று என்பது பொருள்; குறிப்பின் இகழ்தல். அந்தோ, இரக்கக் குறிப்பு. அருவினை உலகம் எல்லாம் படைத்தளித் தழிக்கும் காலம் கருவுறும் எவையும் கால வயத்தவாம் காலந் தான்மற் றொருபொருள் வயத்த தன்றால் உந்தியோன் கற்பத் தீரேழ் பொருவில்இந் திரர்கள் மாய்வர் பொன்றுவர் மனுக்கள் தாமும். 16 | காலம் என்னும் ஒரு தத்துவம் அடைதற்கரிய இருவினைகளையும் உலகம் எவற்றையும் சிருட்டித்துக் காத்து அழிக்கும்; உலகில் தோற்றும் யாவும் அக்காலத்தின் வசப்பட்டன ஆகும். காலம் தான் ஒரு பொருளின் வசப்பட்டதன்று. ஓர் பிரம கற்பத்தில் பதினான்கு இந்திரர்கள் அழிவார்கள். அங்ஙனமே மனுக்களும் பதினால்வர் இறப்பர். காலத்தில் தோன்றுதல்: ‘ஞாலமே விசும்பே இவை வந்துபோம், காலமேஉனை என்றுகொல் காண்பதே’ (திருவாசகம்). |