பக்கம் எண் :


162காஞ்சிப் புராணம்


     சக்கரப் படையை வீசினன்; அம்முதலையின் உயிரைக் கொண்டனன்;
கஜேந்திரனுடன் புண்ணிய கோடீச தலத்தை அடைந்து அக்கஜேந்திரன்
அளிக்கும் மேன்மை பொருந்திய பூமாலை கொண்டு சிவபூசை விதிப்படி
செய்து, பெருந்தவம் செய்து அங்குறுநாள்;

எண்ணரு வானோர் இன்னமும் நாடற் கரியானைக்
கண்ணிணை ஆரக் காண்டகு காதல் கைமிக்கங்
குண்ணிகழ் அன்பால் நெக்குரு கிக்கண் உறைசிந்தப்
புண்ணிய வேதப் பழமொழி ஓதிப் புகழ்கிற்பான்.     15

     அளவிடற்கரிய தேவர்இன்றுந் தேடற்கரிய பரமனை இருகண்களாலும்
பொருந்தக் காணுதற்குப் பெருவிருப்பம் கைகடந்தெழ உள்ளத்து நிகழும்
அன்பு காரணமாக நெகிழ்ந்து உருகிக் கண்நீர்த் துளிகள் துளிப்பப்
புண்ணியந் தரும் வேதப் பழம் பாடலை ஓதிப் புகழ்கிற்பான்.

     ஓதுதற்கிலக்கணம்; ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார்,
என்புழிக் காண்க,

திருமால் துதித்தல்

கொச்சகக் கலிப்பா

நீராய் நிலனாய் நெருப்பாய் வளிவானாய்
ஏரார் இருசுடராய் ஆவியாய் யாவைக்கும்
வேராகி வித்தாய் விளைவாகி எல்லாமாம்
பேராளா எங்கள் பிரானே அடிபோற்றி.         16

     நீரும், நிலனும், நெருப்பும், காற்றும், வானமும், விசும்பிடை எழுதரும்
சந்திர சூரியரும், ஆன்மாக்களும் ஆம் இவைகளாகியும், எவற்றினுக்கும்
மூலமாகியும், காரணமும் காரியமும் ஆம் எல்லாமாகியும் நிற்கும்
பெருமையனே! எங்கள் தலைவனே! நின் திருவடிக்கு வணக்கம்.

     எண்வகை வடிவு விளக்கம்; (திருவே. 67,68,69,)

அண்டபகி ரண்டம் அனைத்தும் அகத்தடக்கிக்
கொண்டுநிறைந் தோங்கியபே ரின்பக் குரைகடலே
தொண்டரெலாம் உண்ணத் தெவிட்டாச் சுவைஅமிர்தே
தண்டலைசூழ் கச்சித் தலைவா அடிபோற்றி.        17

     இந்த அண்டத்தையும், பிற அண்டங்களையும், தன்னுட்கொண்டு
நிறைந்து உயர்ந்த பேரின்பமாகிய கடலே! மெய்யடியர் யாவரும் மேன்மேற்
பருகவும் விருப்புக்குறையாத சுவையினையுடைய அமிழ்தே! சோலை சூழ்ந்த
கச்சி நகர்க்குத் தலைவனே நின் திருவடிகளுக்கு வணக்கம்.

     பேரின்பமாகிய கடல் ஒலித்தலின்மையின் குரை இன அடை,

மாறா அறக்கடவுள் மான அடியேனும்
ஏறாகித் தாங்க அருள்சுரந்த எம்மானே
சீறா துமைகளிப்பத் தேவியாக் கொண்டெனைநின்
கூறாட வைத்தகுணக் குன்றே அடிபோற்றி.       18