அறுசீரடி யாசிரிய விருத்தம் சற்றிது திருவுளஞ் செய்துகேட் டருளுதி தலைவ னேவெங் குற்றமே துறுமனத் தானவக் கொடியவர் தொடங்கு செய்கை முற்றுறா தூறுபட் டழியவும் எம்மனோர் முயன்ற செய்கை இற்றுறா தூறுதீர்ந் தாகவுங் கருணைசெய் எனஇ ரந்தார் 5 | தலைவனே, இதனைச் சிறிது திருவுள்ளம் வைத்துக் கேட்டருள் செய்வாயாக. கொடுங் குற்றங்களையே செறித்த மனத்தினையுடைய தானவராகிய கொடியோர் தொடங்குகின்ற செயல் முற்றுப்பெறாது இடையூறுற்று அழியவும், யாங்கள் முயன்ற செயல் அழியாது தடை தவிர்ந்து முடிவு பெறவும் திருவருளைச் செய் யென வேண்டினார். ‘தம்மை யடைந்தார் வினைதீர்ப்ப தன்றோ, தலையாயவர்தம் கடனாவது’ ஆதலின், தலைவ என்றனர். விநாயகர் திருவவதாரம் அம்மொழி செவிமடுத் தருள்புரிந் தகிலமும் உய்யு மாற்றால் இம்முறை புரிதுமென் றவர்க்கெலாம் விடைஅளித் தெழுந்து போந்து கொம்மைவெள் விடையினான் சித்திரச் சாலையைக் குறுகி அங்கண் செம்மைசால் சித்திரம் யாவையும் நோக்கினான் தேவி யோடும். 6 | அவர் வேண்டுகோளைத் திருச்செவியில் ஏற்றுப் பொது வருள் புரிந்து உலகங்களெல்லாம் நலம் பெறும் பொருட்டால் இவ்வழியைச் செய்வோம் என்றவர்க் கெல்லாம் விடை கொடுத்து அங்கிருந்தெழுந்து போய்த் தேவியொடும் வெள்ளை மழ விடையினான் சித்திரங்கள் அனைத்தையும் நோக்கிக் கொண்டிருந்தனன். வானகத் தச்சனால் அகிலமுஞ் சித்திரித்தெழுதி வாய்ந்த ஊனமில் சாலையுள் எழுதுமா மனுக்களோ டுபம னுக்கள் ஆனஎல் லாம்உமைக் கெம்பிரான் காட்டுபோ தவற்றுள் ஆதித் தானமார் இருவகைப் பிரணவ மனுக்களைத் தையல் கண்டாள். 7 | தேவ தச்சனாகிய மயனால் முழுதுஞ் சித்திரித்து எழுதப் பெற்றுப் பொருந்திய குற்றமில்லாத சாலையுள் எழுதப் பெற்றுள்ள பெரு மந்திரங்களொடு உடன்கூறப் பெறும் உபமந்திரங்கள் ஆகிய எவற்றையும் எம்பெருமான் உமாதேவியார்க்குக் காட்டுங்காலை அவற்றிடை முதலிடங் கொள்ளும் இருவகைப் பிரணவ மந்திரங்களை அம்மையார் நோக்கினார். உவகையாற் பற்பல்கால்நோக்கி இங்கிவைஎவை உரைத்தி என்னச் சிவபிரான் தேவியைத் தழீஇயினன் கூறுவான் செல்வி கேட்டி தவலில் இப்பிரணவம் நமது காண் மூவரைத் தந்த தாகும் நவிலின் மற்றதுநின தாகும்முச் சத்தியை நல்கு மூலம். 8 | |