வலம்புரி விநாயகப் படலம் கலி விருத்தம் நலம்புரி புண்ணிய கோடி நாதர்தம் புலம்புரி பெருமையைப் புகன்று ளேம்இனி நிலம்புரி தவத்தினீர் அத்தி நீள்வரை வலம்புரி விநாயகன் மாட்சி செப்புவாம். 1 | நிலத்தவர் செய்த தவப்பயனாக விளங்குவீர், நலத்தைத் தருகின்ற புண்ணிய கோடீசர் தமது மெய்யுணர்வைத் தருகின்ற பெருமையைக் கூறினோம். இனி அத்திகிரியில் வலம்புரி விநாயகருடைய மாட்சியைக் கூறுவாம். முன்னைநாள் அயன்அரி முனிவர் வானவர் கின்னரர் ஓரிடைக் கெழுமித் தங்களுள் பன்னுத லுற்றனர் படிறர் செய்வினை அந்நிலை ஊறின்றி அழகின் முற்றுமால். 2 | முன்னோர் காலத்தில் திருமால், பிரமன், முனிவர், விண்ணோர், முதலானோர் யாவரும் ஓரிடத்துக் குழுமித் தங்களுள் பேசத் தொடங்கினர். ‘வஞ்சகராகிய அசுரர் செய்கின்ற சூழ்ச்சிகள் அப்பொழுதே இடையூறின்றிச் செவ்விதின் முற்றுப் பெறுமாகலின், அங்கவர் தமக்கிடை யூற்றை ஆக்கவும் நங்களுக் கூறுதீர்த் தினிது நல்கவும் இங்கொரு கடவுளைப் பெறுதற் கெம்பிரான் பங்கயத் திருவடி பழிச்சி வேண்டுவாம். 3 | அந்நிலையே அவர்தம் வஞ்சகச் செயல்களுக்குத் தடையுண்டாக்கவும், நஞ்செயல்களுக்குத் தோன்றும் தடைகளை நீக்கி இனிது முற்றுப் பெறுவிக்கவும் இந்நிலையில்: ஓர் கடவுளை எய்துதற்கு எமது பெருமானுடைய தாமரை மலரனைய திருவடிகளைத் துதித்து வேண்டுதலைச் செய்வோம். இமையவர் இறைவனை வேண்டல் என்றுளந் துணிந்தனர் எய்தி மந்தரக் குன்றமீ தெம்பிரான் கோயி லுள்ளுறாச் சென்றனர் தொழுதனர் செவ்வி நோக்கிமுன் நின்றனர் மறைகளால் துதிநி கழ்த்தினார். 4 | என்றுள்ளத்து முடிவு செய்தனர். மந்தர மலையை அடைந்து, திருக்கோயிலினுட்புக்கு எம்முடைய பெருமான் திருமுன்புசென்று நின்று தொழுது தங்குறை இரத்தற்குரிய காலத்தை நோக்கி முன் நின்று வேத தோத்திரங்களைச் செய்தனர். |