என்றருள் புரிந்த வள்ளலாரின் இரு திருவடிகளையும் திருமால் வணங்கி ‘வெற்றிவாய்ந்த வெள்ளிய இடப ஊர்திப் பெருமானே! மேலும் ஓர் வேண்டுகோள் உளததனைக் கேட்பாயாக; உனது திருவடிப் பூசனையை நாள்தோறும் அடியேன் செய்து வரப் பெரிதும் இந்த யானை ஏவிய திருத்தொண்டினை விரும்பிமேற்கொண்டு நடந்தது. என்னிடை அன்பு சாலப் பூண்டதால் இதன்பேர் தன்னால் உன்னெதிர் அடியேன் வாழும் உயர்வரைக் குடுமி ஓங்கல் மன்னுசீர் உலகின் அத்தி கிரியென வழங்கல் வேண்டும் கன்னலஞ் சிலைவேள் ஆகம் கனல்விழிக் குதவ வல்லோய். 31 | கரும்பு வில்லைத் தாங்கிய மன்மதனை நுதற்கண்ணிற்கு நீறெழ உதவிய வல்லமை உடையோய்! உமது திருமுன் அடியேன் வாழும் உயர்ந்த மூங்கில்களைக் கொண்ட சிகரமமைந்த மலை, என்னிடத்துப் பேரன்பு பூண்ட இவ் யானையின் பெயரால் நிலைபெற்ற சிறப்பினையுடைய உலகில் ‘அத்திகிரி’ என வழங்குதல் வேண்டும். புண்ணிய தீர்த்தப் பொய்கை புனல்படிந் திங்கு ளார்செய் புண்ணியம் ஒன்று கோடி மடங்குறப் புரிந்து மற்றிப் புண்ணிய கோடி வைப்பின் உயிர்க்கெலாங் கருணை பூத்துப் புண்ணிய கோடி நாத இலிங்கத்திற் பொலிக நாளும். 32 | புண்ணிய தீர்த்தத்தில் படிந்து இங்குத் தங்குவோர் செய்கின்ற புண்ணியம் ஒன்று கோடிமடங் காகப் பெருக அருள் புரிந்து இப்புண்ணிய கோடி என்னும் தலத்தில் உயிர்களுக்கெல்லாம் திருவருள் பாலித்துப் புண்ணியகோடி நாத இச்சிவலிங்கத்தில் என்று விளங்குக. அடியனேன் தண்டா தென்றும் நின்னெதிர் அமர்ந்து போற்றக் கடிகெழு கற்பத் தண்தார்க் கடவுளர் முனிவர் யார்க்கும் முடிவறு வரங்கள் நல்கி முழுதருள் சுரந்து வாழி கடியவெஞ் சீற்றத் துப்பிற் கூற்றுயிர் பருகுந் தாளோய். 33 | வழிபடுவோர்க்கு யமபயம் போக்கி அருள்வோனே! அடியனேன் என்றும் நீங்காமல் நின் எதிர் விரும்பியிருந்து துதிப்பவும், வாசனை பொருந்திய கற்பக நறுமலர் மாலைகள் அணிந்த தேவர்க்கும் முனிவர்க்கும் யாவர்க்கும் முடிவில்லாத வரங்களை அருளி அருள் பாலித்து வாழி. அண்ணலே என்று வேண்ட அவற்கவை அருளி எங்கோன் புண்ணிய கோடி நாத இலிங்கத்துட் புக்கான் அந்நாள் கண்ணுதற் பரனை மாயன் காருருக் கொண்டு தாங்கும் வண்மையாற் கற்பம் மேக வாகனப் பெயர்பூண் டன்றே. 34 | தலைவனே, என்று இரந்து நிற்பத் திருமாலுக்கு அவ்வரங்களைத் தந்து எம் தலைவன் புண்ணியகோடீச விலிங்கத்துட் புக்கொன்றாயினன். அக்காலத்தில் நெற்றிக் கண்ணுடைய பிரானைத் திருமால் மேக வடிவு கொண்டு தாங்குதலால் அக்கற்பம் ‘மேக வாகன கற்பம்‘ எனப்பெறும். புண்ணிய கோடீசப் படலம் முற்றுப் பெற்றது. ஆகத் திருவிருத்தம் 535 |