பக்கம் எண் :


புண்ணியகோடீசப் படலம் 165


     திருமால் தன்னையும் வெல்லும் வரத்தைப் பெருமான் தருதல்
வாணேசப் படலம் 74ஆம் செய்யுளிற் காண்க.

எனஅங் கருள்செய் தலும்இந் திரைகோன்
மனம்ஒன் றவணங் கிவணங் கியெழுந்
துனதம் புயபா தயுகத் தடியேற்
கனகம் பெறுபத் தியளித் தருளாய்.            26

     என அவ்விடத் தருள்செய்த அளவிலே இலக்குமி நாயகன் மனம்
பொருந்தப் பலகாலும் வணங்கி எழுந்து உனது தாமரை மலரனைய
அடியிணைகளில் அடியேனுக்குத் தூய பேரன்பினை அளித்து அருள்
செய்யாய்.

     இந்திரை-இலக்குமி. யுகம்-இரண்டு. அனகம்-தூய்மை.

வரதா மரையோ னொடுமற் றுலகும்
வரதா தரல்வேட் டமனத் தினன்யான்
வரதா வரம்ஈ துவழங் குதிநீ
வரதா எனஓ திவழுத் தினனால்.              27

     வரதனே, மேன்மை பொருந்திய பிரமனோடு உலகங்களையும்
படைத்தலை விரும்பிய மனத்தையுடையேன் அடியேன். வரதனே! வரமாக
இதனை வழங்குவாய் நீ. வரதா எனக் கூறித் துதித்தனன்.

நின்னா சைநிரம் பவரங் களெலாம்
இன்னே கொளநல் கினம்ஏ ரிழைமா
மன்னா பலகால் வரதா எனநீ
சொன்னாய் எமைஅன் புதுளும் புறவே.         28

     அழகிய அணி பூண்ட இலக்குமி நாயகனே! நின் விருப்பம் முற்றுப்
பெற வரங்கள் யாவும் இப்பொழுதே கொள்ளும் வகை அளித்தோம். வரதா
எனப் பலமுறை எம்மை அன்பு ததும்ப அழைத்தனை. ஆகலின்

வாசத் துளவோய் இனிநீ வரத
ராசப் பெயராற் பொலிவாய் எமதாள்
பூசித் தனைபுண் டரிகங் களினால்
பேசிற் பதுமாக் கனெனப் பெறுவாய்.           29

     நறுமணங்கமழும் துழாய் மாலையோனே! இனி நீ வரதராசன் என்ற
பெயரொடும் விளங்குக! தாமரை மலர்களைக் கொண்டெம்முடைய
திருவடிகளைப் பூசித்தமையால் சொல்லுமிடத்துப் பதுமாக்கன் (பதுமாட்சன்)
எனப் பெயர் பெறுவாயாக.

அறுசீரடி யாசிரிய விருத்தம்

என்றருள் புரிந்த வள்ளல் இணையடி வணங்கி மாயோன்
வென்றிவெள் விடையாய் இன்னும் விண்ணப்பம் ஒன்று கேட்டி
நின்றிருப் பாதபூசை நித்தலும் அடியேன் ஆற்ற
நன்றும் இவ் வத்தி ஏவற் பணிநயந் தொழுகிற் றன்றே,    30