பக்கம் எண் :


164காஞ்சிப் புராணம்


இறைவன் காட்சி கொடுத்தருளுதல்

கலி விருத்தம்

என்னப் பலபன் னியிரந் தயரும்
பொன்னுக் கிறைமேல் அருள்பொங் கியெழ
மின்னற் சடையோன்விடைமீ துவரை
அன்னத் தொடுகாட்சி அளித் தனனால்.         22

     என்றிவ்வாறாகப் பலகூறிக் குறையிரந்து தளரும் திருமகளுக்கு
நாயகன்பால் அருள் மிக்கு எழுதலினாலே மின்னலை ஒத்து ஒளி விடும்
சரையுடைய பிரான் இடபவூர்தியில் இமயமலை அரசன் மகளாகிய
அன்னத்தொடும் அத் திருமாலுக்குத் தரிசனம் தந்தனன்.

     எத்தனையும் காண அரியன் காண எளியனாயினன் ஆகலின் கருணை
செய்தனன் என்பார் அளித்தனன் என்றனர்.

கண்டான் இருகண் களிகூரமகிழ்
கொண்டான் வறியோன் கொழிதெள் ளமுதம்
உண்டா னெனஓ டினன்ஆ டினனால்
வண்டா மரைமா துமணா ளனரோ.            23

     வளப்பம் பொருந்திய தாமரை மலரில் இருக்கின்ற இலக்குமி
நாயகனாகிய திருமால் இருகண்களும் களிப்பு மீதுரக்கண்டனன்; மகிழ்ச்சி
கொண்டனன்; தேவ போகத்திற்குரிய னல்லாத வறிய னொருவன் அமிழ்தம்
உண்டவனைப் போல ஓடினன் ஆடினன்.

     அன்புநிலை; கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே’ (சிவஞா.) 

அதுகண் டுமையால் அருள்நோக் குதவி
விதுவொன் றுபொலஞ் சடைவிண் ணவனேர்
முதிருங் குறுமூ ரல்முகத் தலர
மதுசூ தனகேட் டிவரந் தருகேம்.             24

     இளஞ் சந்திரனைப் பொன்மயமான சடையிற்சூடிய பெருமான்
திருமாலின் பேரன்பின் செயலைக்கண்டு இடப் பாகத்து அம்மையைத்
திருக்கண் சாத்தி அழகு கனியும் புன்சிரிப்பு முகத்தில் தவழ மதுசூதனனே!
வேண்டிய வரத்தைக் கேள். அவற்றைத் தருவேம் யாம் என்றருளினர்.

     படைப்புத் தொழில் திருமாலுக்கு முற்றுப் பெற அம்மையப்பர்
அருள்வேண்டும் ஆகலின்‘உமைபால் அருள்நோக்குதவி’ என அருளினர்.

நரர்வா னவர்தம் மினுநா ரணநீ
பெருவான் வலிபெற் றுளைஎம் அருளால்
பொருபோ ரினுள் எம் மினும்வென் றிபுனை
வரம்எம் மிடைமுன் பெறுமா தவனே.         25

     எமது அருள் வலிமையால் பகைவரொடு பொருகின்ற போரில்
எம்மிடத்தும் வெற்றி கொள்ளும் ஆற்றலை எம்மிடத்து முன்பெற்றுள்ள
திருமகள் நாயகனே! நாரணனாகிய நீ மானிடர் தேவர் யாவரினும் மிகப்
பெருவலி பெற்றுள்ளாய்.