பக்கம் எண் :


வலம்புரி விநாயகப் படலம் 179


     குறை இரக்கும் திருமகள் நாயகனுக்கு எமது பெருமான் காட்சி தந்து
காணத் தக்க கணநாதன் தனது கைக்கொண்டிருந்த மாட்சிமைப் பட்ட
புகழையுடைய சங்கத்தை அளித்தருளித் திருமாலே இப்பொழுது உனக்கு
இன்னும் வேண்டுவது யாது அதனைக் கூறென்றருள,

     வெளி நிற்றல்:  ‘பிரசன்ன வதனம்’ என்றமை காண்க.

முன்னாய புண்ணியகோ டீசர் திருமுன்பென்
றன்னோடிவ் வத்தித் தடங்கிரியில் வீற்றிருந்திங்
கெந்நாளும் எல்லார்க்கும் எவ்வரமும் ஈந்தருளாய்
மன்னாஎன் றேத்த மகிழ்ந்தங்கண் வைகினனால்    46

     எப்பொருளுக்கும் முன்னாய புண்ணிய கோடீசர் திருமுன்பு
இவ்வத்திகிரியில் என்னோடெழுந்தருளி யிருந்து எந்நாளும் யாவர்க்கும்
அவரவர் வேண்டிய வரத்தையும் ஈந்தருள்வாய் அரசே! என்று துதிக்க
மகிழ்ந்து அவ்விடத்துத் தங்கினன்.

ஒன்னலரை வாட்டும்உலவைக் படைத்தேவும்
பன்னகப்பூம் பாயல் திகிரிப் படைக்கோவும்
அன்னநடைக் குன்ற மால்வரையின் ஆருயிர்கட்
கென்ன வரமும் அளித்தென்றும் மேவுவார்.       47

     பகைவரை அழிக்குத் தந்தத்தை ஆயுதமாகக் கொண்ட விநாயகப்
பெருமானும், ஆதிசேஷனாகிய பொலிவுடைப் படுக்கையையும் சக்கரப்
படையையும் உடைய வரதராசரும் அந்த அத்திமலையில் அரிய உயிர்கள்
எவற்றினுக்கும் எத்தகைய வரமும் அருள் செய்து என்றும் நீங்காது
வீற்றிருப்பர்.

     பெருமானுக்கு உறவும், பகையுமின்மையின்;  நல்லோர்க்குப் பகைவர்
என்க. உலவை-விலங்கின்கொம்பு. உலவை:  ‘‘தாமமால் ஓடை யானைத்
தரள நீளுலவை’’ (கச்சி.காஞ்,கழுவாய்ப் படலம் 397) பன்னகம் -பாம்பு;
காலால் நடவாதது என்பதுபொருள். மார்பால் ஊர்தலின் உரகம் எனப்படுதல்
காண்க. அந்தோ-அன்னோ என்புழிப்போல, அந்த, அன்ன என்றாயது.

மற்றிதனைக் கற்றோருங் கேட்டோரும் மாசிலர்க்குச்
சொற்றவரும் ஊறு தவிர்ந்தென்றுந் தொல்லுலகில்
பெற்றமக வாதிப் பெருஞ்செல்வத் தோடுறைந்து
பற்றறுத்து மேலைப் பரபோகம் மேவுவரால்.      48

     இந்த வரலாற்றைக் கற்றவரும், குற்றமற்றவர்க்குக் கூறினவரும்
இடையூறு நீங்கி மூதுலகில் மக்கள் முதலாம் பெருஞ் செல்வத்தோடும்
வாழ்ந்து இருவகைப் பற்றும் நீங்கி மேன்மை பொருந்திய பேரின்பமும்
அடைவர்,