பக்கம் எண் :


180காஞ்சிப் புராணம்


     கற்றல், கேட்டல், கற்பித்தல் ஆகிய இவை ஞானபூசை ஆகலின்
பயன் கூறினார். ‘‘ஞானநூல் தனைஓதல் ஓதுவித்தல் நற்பொருளைக்
கேட்பித்தல் தான் கேட்டல் நன்றா, ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல்
ஐந்தும் இறைவனடி அடைவிக்கும் எழில்ஞானபூசை’’ (சிவ.சித்.276)

வலம்புரி விநாயகப் படலம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம் 583

சிவாத்தானப் படலம்

கலி விருத்தம்

அலம்புநீர் வாவிசூழ் அத்திமா மலைமிசை
வலம்புரி விநாயகன் வரவிது போதினான்
நலம்புரி பூசைசெய் நவில்சிவாத் தானமாம்
புலம்புரி பெருமையைப் புகலுதுங் கேண்மினோ.     1

     ஒலிக்கின்ற நீர் நிரம்பிய வாவிகள் சூழ்ந்த அத்திகிரியில்
எழுந்தருளியுள்ள விநாயகப்பெருமான் வரலாறு இதுவாகும், பிரமன்
நன்மையைச் செய்கின்ற சிவபூசையைச் செய்தமையால் பேசப் பெறுகின்ற
சிவாத்தானமாம் தலம் விரும்புகின்ற பெருமையினைக் கூறுவேம்;
முனிவர்களே! நீவிர் அதனைக் கேண்மின்.

     போதினான்-மலரோனாகிய பிரமன். நலம் புரிதல்-நன்மையை
எக்காலத்தும் செய்தல். பசு, பாச அறங்கள் பயன் கொடுத்து அழிந்து விடும்.
பூசைசெய்தலின் வரு பயன்கள் ஞானத்தைப் பயத்தலின் என்றும் அழிவில
என்க.

ஆதிநாள் சிவனிடத் துதித்தவன் அருளினாற்
பேதியா துலகெலாம் படைத்திடப் பெற்றுள
சீதநாண் மலர்மிசைத் திசைமுகன் றன்னைமால்
மூதுல கோடும்உண் டாக்கினன் முறைமையால்.     2

     படைப்புக் காலத்தில் திருமால், சிவபிரானுடைய இடப்புறத்துத் தோன்றி,
அப்பெருமான் திருவருளால் எல்லா உலகங்களையும் மாறுபாடின்றிப் 
படைத்தலைச் செய்யும் உரிமை உடைய குளிர்ந்த அப்பொழு தலர்ந்த
மலர்மேலுள்ள பிரமனையும் உலகங்களையும் முறையாற் சிருட்டித்தனர்.

     நாள்மலர்-நாளும் மலர், தெய்வத்தன்மையால் கூம்பாதமலர். ஒடுங்கிய
உலகே தோன்றுதலின் முறைமையால் எனவும் கூறினர்.