சார்ந்தாசயப் படலம் கலிநிலைத் துறை வளைத்த பாப்பணி அணிமணி கண்ட நாயகனாம் முளைத்த வெண்பிறைக் கண்ணியோன் வரவிது மொழிந்தாம் விளைத்த சூளினால் இளைத்துறும் வியாதனைக் காத்த இளைத்துச் சார்ந்தவர் சார்பினான் வரவினி இசைப்பாம். 1 | புற்றிடமாக வாழும் பாம்பாகிய அணியை அணிந்த மணிகண்டேசப் பெருமானாம் அரும்பிய வெண்பிறையைக் கண்ணியாக உடையபிரான் வரலாறாகிய இதனை மொழிந்தாம். தாம் செய்த சபதத்தினால் இளைத்துச் சரண்புகுந்த வியாத முனிவனுக் கருள்செய்த சார்ந்தவர்க்குச் சார்பினன் ஆவோன் வரலாற்றினை இனிக்கூறுவாம். வளைத்த இன அடை. ‘‘புற்றா டரவா புக்கொளி யூரவி நாசியே’’ எனவும், ‘‘புற்றில் வாளர வார்த்த பிரானை’’ எனவும் (சுந்தரர் தேவாரம்) காண்க. பிறத்தலால் வருபெயர் பிறை. கண்ணியாகச் சூடல்: ‘‘மாதர் பிறைக் கண்ணியானை’’ (திருநா. திருவையாறு.) சார்ந்தார் ஆச்ரயம் சார்ந்தார்க்கு ஆதரவு. வியாசர் முனிவர்க்கு விடுத்த விரிவுரை பராச ரப்பெயர் முனிவரன் பழுதறு வரத்தால் தராத லத்திடைத் தோன்றிநான் மறைதனிப் பதினெண் புராணம் ஏனவும் பகுத்துயர் புரவுபூண் டோங்கிப் பிரானெ னத்தகு வியாதனாம் பெரியவன் மேனாள். 2 | பராசர முனிவரர் செய்குற்றமற்ற தவத்தால் தரையிடை அவதரித்து, வேதங்களையும், ஒப்பற்ற பதினெண் புராணங்களையும், பிற நூல்களையும் பகுத்துயர் காவல்பூண் டுயர்ந்து தலைவனெனத் தக்க வியாதனாம் பெரியவன் முன்னாளில், கொடிய பாதகக் கலியுகம் வருநிலை குறித்துப் படியில் யாங்கினிச் செல்வதென் றஞ்சிமெய் பனித்துக் கடிந றும்புனற் கங்கைசூழ் காசியின் எய்தி முடிவில் மாதவஞ் செய்துவீற் றிருந்தனன் முறையால். 3 | கொடிய பாவச் செயல்களைப் புரிதற்கு இடனாகிய கலியுகம் வரும் பரிசு கருதி, நிலவுலகில் எவ்விடத்திக் கலியின் கொடுமையைப் போக்குவதென் றுள்ளத்துள் அச்சமெய்தி, உடல் நடுங்கி முடிவாக விளக்கமும், மலர்களால் நறுமணமும் கொண்ட கங்கை நீர் சூழ்ந்த காசியை அடைந்து அழிவில்லாத பெருந்தவத்தை நூல் விதிப்படி செய்து மகிழ்ச்சியோடிருந்தனன். |