பக்கம் எண் :


மணிகண்டேசப் படலம் 215


கொங்க லர்ந்தபூந் துணர்தொறும் நறுநறாக் கொழிக்கும்
பொங்கர் சூழ்கலிக் கச்சியுட் பழமறைப் பொருளாய்
அங்கண் வாழ்மணி கண்டனை அருச்சனை ஆற்றித்
துங்க முத்தியிற் சேர்ந்தவர் தொகுப்பின்எண் ணிலரால்.   66

     நறுமணம் விரிந்த ’பூங்கொத்துக்கள் தோறும் நறிய தேன் செழித்து
ஒழுகும் சோலைகள் சூழ்ந்த கலிக்கச்சியுள் அநாதியாய் உள்ள மறைகளின்
விளங்கும் பொருளாகி அவ்விடத்தும் விளங்கி வீற்றிருக்கும்
மணிகண்டேசனைப் பூசனை புரிந்து உயர்ந்த முத்தியிற் றலைப்பட்டோர்
தொகை கூறப்புகின் அளவிலராவர்.

     கலி-பெருமை, பொலிவு, எழுச்சி, வலி, ஒலி முதலிய பொருள்களைக்
குறிக்கும். ‘கலிக்கச்சி’ 37-ஆம் பக்கம் 100 செய்யுளிலும் காண்க. துங்கமுத்தி-
இரண்டறக்கலத்தல்.

அறுசீரடி யாசிரிய விருத்தம்

     அடுங்காலம் இதுவென்ன விடம்எழலும் நனிவெருவி அயன்மால்
ஏனோர், கொடுங்காலன் றனைக்குமைத்த குரைகழற்கீழ்ச் சரண்புகுதக்
கொதித்து வாழ்நாள், பிடுங்காமல் அருள்புரிந்த பரம்பொருளை
யன்றியும்ஓர் பிரான்உண் டென்ன, நடுங்காதார் தமைக்காணப்
பெற்றிடினும் என்னுள்ளம் நடுங்கும் மாதோ.                  67

     சங்கார காலம் ஈதென்று மதிக்குமாறுவிடம் தோன்றிய அளவிலே
பெரிதும் நடுக்க மெய்திப் பிரமன் திருமால் முதலானோர் வலிமை அமைந்த
இயமனை உதைத்துருட்டிய ஒலிக்கின்ற வீரக் கழலணிந்த திருவடிக்கீழ்
அடைக்கலம் புகச் சினந்து வாழ்நாளைப்பறியாமல், அமுதம் தந்து வாழ்வித்த
பரம்பொருளை அன்றியும் ஓர் தலைவனுளன் என்னக் கேட்டு நடுங்காதார்
தமைக்காணப் பெற்றிடினும் என் உள்ளம் நடுக்கம் எய்தும்.

     இயமனை உதைத்த பிரானாகலின் மரண பயத்தை நீக்குபவன்
அவனே; அச்சுதன், அமரர் என்னும் சொற்பொருள்களாகிய அழியாதவன்,
மரணமில்லாதவர் என்பதன் தாற்பரியம் மக்களை நோக்க நெடுங்காலம்
வாழ்பவர் என உணர்த்தும். 

     எம்பிரான்’ ‘திருமாலையும் சிலர் தெய்வமென்று கூற விடமுண்டு
அவர் தம்மைக் கருணையால் காத்தனர் என்று திருவெங்கையுலா கூறும்.
எனவே, விடமுண்டிலரேல் பெயர் தானும் இல்லையாக மறைந்தொழிவர்.
வணங்குவோரும் இலர் என்பது கருத்து. ‘பரங்கெடுப்பவன் நஞ்சை யுண்டு’
(திருஞா. மழபாடி.). ‘சிராப்பள்ளித் தலைவரை நாளும் தலைவரல்லாமை
யுரைப்பீர்காள் நிலவரை நீலமுண்டதும் வெள்ளை நிறமாமே’ (திருஞா.)
நீங்கள் பரம்பொருளென்னக் கொள்ளாதவழி விடம் வெளுத்துப்போமோ?
நீலகண்டம்’ அவனே பரம்பொருளென்பதையுணர்த்தும்’.

மணிகண்டேசப் படலம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம் 699