பக்கம் எண் :


214காஞ்சிப் புராணம்


     திருப்பாற் கடலைக் கடைந்த அந்நாள் தம்முடைய உயிரைப்
பாதுகாத்தளித்தது நீலமணியை ஒக்கும் திருக்கழுத்தென்னும் செய்ந்நன்றியால்,
வென்ற புண்ணியகோடி நாதர் எழுந்தருளியுள்ள தலத்திற்கு மேற்குப்
பக்கத்தில் மணிகண்டநாதப்பெயர் பூண்ட சிவலிங்க மூர்த்தியைத் தாபித்து
மனம் ஒன்றிய அன்பினால் பூசனையைச் செய்து.

மணிகண் டேசர்தம் அருளினால் வன்பிழை தவிர்ந்து
பணியி னாற்கடல் கடைந்தமிழ் தெடுத்தனர் பருகித்
தணிவில் வெஞ்சினத் தானவர் தமைத்துரந் தகற்றிப்
பிணியும் நீங்கினர் இறப்புறாப் பெருநலம் பெற்றார்.    63

     மணிகண்டேசப் பெருமான் திருவருளினால் அதிபாதகம் நீங்கி வாசுகி
என்னும் பாம்பினால் கடலைக்கடைந்து அமிழ்தம் எடுத்துப் பருகித் தணியாத
கொடுங் கோபமுடைய அசுரர்தம்மைத் துரத்தி அகற்றி நோயும் நீங்கினர்; 
இறவாத பெருநலமும் பெற்றார்.

     தானவர்க்கு அமுது கொடாமையைத் துரந்து அகற்றி என்பதனால்
பெறவைத்தார். மாசாத்தன் தளிப்படலம் முதலியவற்றில் காணலாம்.

பணாமணீச வரலாறு

அத்த லத்திடைத் தன்பிழை அகலவா சுகியும்
பத்தி யிற்பணா மணீசனைப் பண்புற இருத்திச்
சுத்த நீர்நிறை அனந்ததீர்த் தத்தடந் தொட்டு
நித்தம் அக்கரைக் கண்இருந் தருச்சனை நிரப்பி.    64

     அத்தவத்தின்கண் தனது பிழைதீர வாசுகி என்னும் பெரும் பாம்பும்
பேரன்பிற் பணாமணீசனை விதிப்படி தாபித்துத் தூயநீர் நிறைந்த அனந்த
தீர்த்தத் தடம் வகுத்து நாடொறும் அக்கரையிலிருந்து அருச்சனை முற்றுறச்
செய்து,

பணாம ணீசனைத் தன்பண மணிகளாற் பரவி
நணாவ கத்தமர் நம்பனே நலிவுசெய் விடத்தை
உணாவெ னக்கொளும் உத்தமா எனத்துதித் துமையாள்
மணாளன் மேனியில் இழையெனப் பயில்வரம் பெற்றான்.  65

     பணாமணீசப் பெருமானைத் தன்னுடைய படத்தின் இரத்தினங்களால்
பூசனை செய்து திருநணா என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள
விரும்பியடையத்தக்கவனே! வருத்தம் செய்த விடத்தை உணவு போலக்
கொண்டு பருகும் தலைவனே! எனத் துதி செய்து உமையம்மை மணவாளன்
திருமேனியில் அணிகலமாகத் தங்குகின்ற வரத்தினைப் பெற்றனன்.

     வாசுகி பாலில் விடம் பெய்த பிழையுந் தவிர்ந்து அணிகலனாக
இறைவன் திருமேனியில் விளங்கவும் பேறு பெற்றனன்.