விளங்குகின்ற திருமாலும் பிரமனும் இருபக்கத்திலும் ஞானம் திகழ்கின்ற திருவடி மலர்களைத் தாங்கிச் செல்லவும், வீரமுடைய படைகளையுடைய தேவர் வானிடை நெருங்கி ஒலிக்கின்ற வண்டுகள் மொய்யாத கற்பக மலர் மழையைப் பொழியவும், அறம்-பரபோகம்; ‘‘பொன்னும் பொருளும் போகமும் அல்ல அன்பும், அருளும், அறனும்’’ (பரி. .) என்புழி அறம் அப்பொருட்டாதல் காண்க. எட்டு மாதிரத் தலைவரும் போற்றெடுத் திறைஞ்ச வட்ட வெண்குடை நந்திதன் திருக்கரம் வயங்கக் கட்டு சாமரை உருத்திர கன்னியர் இரட்ட ஒட்டி மாகதர் சூதர்கள் வாழ்த்தொலி எடுப்ப. 36 | இந்திரன் முதலிய எண்திசைத் தலைவரும் புகழ்ந்து துதிக்கவும், திருநந்தி தேவர் திருக்கரத்தில் வெண்கொற்றக்குடை விளங்கவும், கட்டிய சாமரையை உருத்திர கணிகையர் இருபுறத்தும் இரட்டுற வீசவும், கூடிய இருந்தேத்துவோராகிய மாகதரும், நின்றேத்துவோராகிய சூதரும் வாழ்த்தொலி எடுத்தோதவும், நீண்ட செஞ்சடைப் புதுமதி இளநிலா விரிப்ப ஈண்டு பூதவெங் கணங்களோ டெதிரெழுந் தருளி மூண்ட பேரருள் ஊற்றெழக் குறுநகை முகிழ்த்து மாண்ட சீர்முனித் தலைவனை நோக்கிவாய் மலரும். 37 | நீண்ட சிவந்த சடையிடைப் பிறை தண்ணிய கதிரை விரிப்பவும், திரண்ட விரும்பத்தக்க பூதகணங்களுடன் எதிரெழுந்தருளி மேன் மேலெழுகின்ற பேரருள் ஊறிப் பெருகும்படி புன்முறுவல் பூத்து மாட்சிமைப்பட்ட சிறப்பினையுடைய முனிவர் தலைவராகிய வியாசரை நோக்கித் திருவாய் மலர்ந்தருள் செய்வர். அறுசீரடி யாசிரிய விருத்தம் எவனைநீ மதித்து நம்முன் சூளுற விசைத்தாய் இந்நாள் அவன்இதோ காண்டி மற்றெம் அடியிணை தாங்கி நின்றான் சவலைநீ பேதை நீரால் சாற்றினை எம்மைத் தேறா துவலையாம் மதத்தில் பட்டோர் இடும்பைநோய் உழப்பர்கண்டாய். 38 | ‘‘எவனை நீ போற்றி நம் திருமுன்பு உறுதிமொழி கூறினாய்; இப்பொழுது அவன் இங்கு எம்முடைய திருவடி மலர்களைத் தாங்கி நிற்கின்றான் அதனைக் கண்டிடுதி. அறிவு முதிராத இயல்பினை உடைய நீ பேதைமையால் பலரறியப் பரப்பினை. எம்மியல்பைத் தெளியாது பொய்ச் சமய நெறி நின்றோர் பிறவி நோயான் வருந்துன்பத்தை அநுபவிப்பர்’’ ‘‘உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம் சவலைக் கடலுளனாய்க்கிடந்து தடுமாறும்’’ என்புழிக் (திருவா.தெள்,17) காண்க. |