பக்கம் எண் :


234காஞ்சிப் புராணம்


     யாதானும் பச்சிலை எனினும், பழைய மலர் எனினும் ஆகக்கொய்து
அருச்சித்துப் பேரன்பு செலுத்துவோர்க்குக் குறைவில்லாத போகமும், பர
போகமும் நல்கி அருள் செய் இறைவனே போற்றி! மூவுலகிற்கும் முதல்வனே
போற்றி! தனத்தழும்பாகிய அணி பூண்டோனே போற்றி! விரும்பினார்க்
கினியாய் போற்றி! என்று தோத்திரஞ் செய்கின்ற பொழுதில்,

ஆயிடை வெளிநின் றெம்மான் அத்திரி பிருகு வாதித்
தூயரை நோக்கி வைவச் சுதமனு வந்த ரத்தில்
நீயிர்எம் ஆணையாற்றான் நிகழும்ஏழ் முனிவர் ஆமின்
மாயிரு முத்தி ஈற்றின் வழங்குதும் என்று பின்னும்.   12

     எமது பிரான் அவ்விடத்தில் வெளித்தோன்றி அத்திரி, பிருகு முதலிய
தூய முனிவரரை நோக்கி “வைவச்சுத மனுவந்தரத்தில் நீவிர் எம்முடைய
ஆணையின்படி விளங்கும் முனிவரர் எழுவீர் ஆவீராக!  தலையாய முத்தி
(ஒன்றி ஒன்றாநிலை) யை முடிவில் வழங்குவேம்” என்றருளி மேலும்,

ஏழ்இலிங் கத்தும் எம்மைத் தரிசித்தோர்க் கிருமைப் பேறாம்
வாழ்வளித் தருள்கேம் என்று வரங்கொடுத் தகன்றான் ஐயன்
பாழ்வினை அறுக்குஞ் சத்த தானத்திற் பணியப் பெற்றோர்
ஊழ்வலித் தொடக்கு நீங்கி உம்பர்கோன் அடியிற் சேர்வார்.  13

     சிவலிங்கம் ஏழனிடத்தும் எம்மைத் தரிசித்தோர்க்குப் போகமும்,
பரபோகமும் ஆம் வாழ்வை அருள் செய்வேம்’’ என்று வரங்களை அருளி
ஐயன் வெள்ளிடை நின்றும் திருவுருக் கரந்தனன். வினையைப் பெருக்கலும்
நுகர்ந்து ஒழித்தலுமாகிய பாழே கழிக்கும் வினைப்பாசங்களை அறுக்கும்
இடனாகிய (ஏழிடங்கள்) சத்ததானங்களில் வணங்கினோர் ஊழையும் வென்று
இறைவனது திருவடி நிழலிற் றங்குவர்.

சத்த தானப் படலம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம் - 763