பராசரேசப் படலம் கலி விருத்தம் தருமம்பிற ழாத சத்ததா னத்தின் பெருமைஉரை செய்தாம் சத்திபெறு மைந்தன் தருதந்தையர்க் கொன்ற அரக்கர்தம தாவி பருகவழி பட்ட பராசரஞ் சொல்வாம். 1 | தன்னியல்பிற்றிரியாத இருவகைத் தருமங்களுக்கும் இடனாகிய ஏழிடங்களின் பெருமையைப் புகழ்ந்தோம். சத்தி முனிவர் ஈன்ற பராசரர், தமக்குந் தந்தையையும், தந்தையுடன் பிறந்தோரையும் கொன்ற அரக்கர் தம்முடைய உயிரைப் பருகும் ஆற்றலைப் பெற வழிபாடு செய்த பராசரேசத்தைப் பற்றிக் கூறுவாம். கௌதமன் கைதவம் மத்தப்புலன் வென்ற வசிட்டன் தரவந்தார் பத்தையிரு மக்கள் பதுமத்தவன் ஒப்பார் சத்திமுத லானோர் தகவால்இவர் வாழ்நாள் சுத்தநெறி தேர்விச் சுவாமித்திரன் என்போன். 2 | மயக்குகின்ற ஐம்புலன்களையும் தன் வழிப்படுத்திய வசிட்ட முனிவர் ஈன்ற மக்கள் நூற்றுவரும் பிரமனை ஒப்பவர்; சத்தி முதலாகிய அவர் தகவொடும் வாழ்கின்ற காலத்தில் நன்னெறியை நாடுகின்ற விசுவாமித்திரன் எனப்படுவோன். அசித்துப்புரஞ் செற்றோன் அருளான்உயர்ந் தோங்கும் வசிட்டனுடன் என்றும் மாறுகொண் டுள்ளான் வசிக்குந்தவ வாழ்க்கை வசிட்டன்குல மெல்லாம் நசிக்கும்படி ஒன்று நாடிஇது செய்தான். 3 | சிரித்துப் புரத்தை எரித்தோன் திருவருளால் மிகவும் உயர்ந்த வசிட்ட முனிவனுடன் எந்நாளும் பகை கொண்டுள்ளானாகலின், தவ வாழ்வில் காலம் கழிக்கும் அவ்வருட்டவ முனிவன் மரபு முற்றும் கெடும்படி ஓர் சூழ்ச்சியை ஆராய்ந்து இதனைத் துணிந்தனன். மன்னர்வழித் தோன்றி வசிட்டன்சா பத்தால் துன்னும்அரக் கன்னாம் சுதா சன்எனும் பேரோன் றன்னைவிளித் தேவத் தறுகண்ணவன் எய்தி இந்நூற்றுவர் தம்மை எடுத்துவாய்ப் பெய்தான். 4 | |