அரசர் குலத்தில் தோன்றி வசிட்ட முனிவர் சாபத்தினால் மிண்டு செறியும் அரக்கனாம் சுதாசன் என்னும் பெயரினையுடையவன் தன்னை அழைத்துத் தூண்ட வன்கண்மையுடைய அவன் எய்தி அவர் நூற்று வரையும் எடுத்து விழுங்கினான். வடமீனவ ளோடும் வசிட்டன்அது கேட்டுப் படர்கூர்ந்தழு தேங்கி ஆற்றிப்பறம் பேறிப் புடவிமிசை வீழப் பூமாதுளம் நெக்காள் உடல்விண்டொழி யாமே தாங்கிஉய் வித்தாள். 5 | அருந்ததியோடும் வசிட்டன் அதனைக் கேட்டறிந்து துன்பம்மிக்கு அழுதிரங்கித் தவிர்ந்து மலைமேலேறி அங்கிருந்து உயிரை விடும் பொருட்டுப் பூமியில் வீழ உடம்பு சிதைந்தொழியாதவாறு நிலமகள் உளம் நெகிழ்ந்து தாங்கி உயிர் பிழைக்கச் செய்தனள். வன்பர்ப்பதம் ஏறி வீழ்ந்தும்மா யாமே அன்பிற்புவி தாங்க அயர்ச்சிதெளிந் தேங்கி இன்பமக வெல்லாம் இழந்தசோ கத்தால் துன்பக்கரை காணார் புலம்பிச்சோர் காலை. 6 | திண்ணிய மலைமிசை ஏறி வீழ்ந்தும் இறவாதபடி பூமிதேவி அன்பினால் தாங்க அவசம் தெளிந்து இரங்கி மனையறத்தில் இன்பமிகும் மக்கள் நூற்றுவரையும் இழந்த புத்திரசோகத்தால் துயரக்கடலில் மூழ்கினோர் அதனினின்றும் உய்யும் வழி காணாராய் வருந்தித் தளரும்போது, பராசரர் பிறத்தல் கொன்னும்வசிட் டன்தன் குலமைந்தரின் மூத்தோன் மன்னுந்தவச் சத்தி யென்பான்மனை யாட்டி அன்னசெயல் கேளா அரற்றிக்கருப் பத்தால் துன்னும்வயி றெற்றிப் புரளுந்துயர் கண்டான். 7 | மனவலி யிழந்த வசிட்ட முனிவரர் பெருமை பொருந்திய மக்களின் மூத்தோராய நிலைபெறுந் தவத்தினையுடைய சத்தி முனிவர்தம் வாழ்க்கைத் துணைவி தன் கணவனாரும், மைத்துனர் தொண்ணூற்றொன்பதின்மரும் துஞ்சிய செய்தி அறிந்து பெருக அழுது கருவுற்றிருத்தலால் இறுகும் வயிற்றிடை மோதிப் புரளுந் துன்பத்தினைக் கண்டான். ஆவாஎன் செய்தாய் அந்தோகெட் டேன்என் தாவாச்சந் தானத் தானந்தனை எற்றி, மூவாக்குலம் முற்றும் முடிக்கமுயல் கின்றாய் பாவாய்என நைந்து கூறப்பணைத் தோளி. 8 | |