பக்கம் எண் :


பராசரேசப் படலம் 237


     பாவையே! ஆவா என்ன செய்தாய்! அந்தோ கெட்டேன்! என்
அழியாத சந்ததி இருக்கையாகிய வயிற்றிடை எற்றி முதிர்ந்து கெடாத வமிசம்
முழுதும் முடிக்க: முயல்கின்றனை; எனக் கூறி வருந்தியவழி மூங்கில் போலும்
தோளினள்

     ஆவா என் செய்தாய் அந்தோ கெட்டேன்! இச்சொற் றொடர் இரக்கக்
குறிப்பின் உச்ச நிலையை எட்டுகிறது,

மாமன்மொழிக் கஞ்சி வாளாஅமர் போது
தூமென்மலர்க் கூந்தல் எற்றுந்துயர்க் காற்றாப்
பூமென்கருப் பத்துட் பொலியுங்குழ விநைந்
தாமென்கனி வாய்விண் டழுபேரோலி கேட்டு.      9

     மாமனாருடைய மொழிக்கு அச்சங்கொண்டு வறிதேயிருந்தபோது
தூய மெல்லிய மலரணிந்த கூந்தலாள் மோதிய துன்பத்திற்குப்பொறாத
பூப்போலும் மெல்லிய கருவினுட் பொலியுங் குழவி வருந்தி மெல்லிய
கொவ்வைக் கனிபோலும் நிறத்தினையும், மேன்மையையும் உடைய
வாய்விட்டழுகின்ற பேரொலி கேட்டு,

அறுசீரடி யாசிரிய விருத்தம்

     இவ்வோதை எவர்ஓதை யெனவசிட்டன் தன் உள்ளத்தெண்ணா
நிற்கும், அவ்வேல்வைப் படநாகச் சேக்கைமிசைக் கண்படுக்கும்
அறவோன் தோன்றிச், செவ்வாய்மை முனிவரநின் சந்தானந்
தழைத்தோங்கத் தேயம் வாழ, ஒவ்வாதார் குலஞ்சிதைய நின்மகனுக்
கொருமைந்தன் உதிக்கின் றானால். 10

     ‘இவ்வொலி எவர் குரலொலி‘ என வசிட்டன் தன் உள்ளத்தெண்ணி
நிற்கும் அப்பொழுது படப்பாம்பின் பாயலில் கண் வளரும் அறவோனாகிய
திருமால் தோன்றிச் ‘‘செவ்வி தாகிய சத்தியத்திற் பிறழாத முனிவரனே!
நின் குலந்தழைக்கவும், உலகோர் வாழவும், பகைவர் குலம் அழியவும்
நின்மகனாகிய சத்திய முனிக்கு ஒப்பற்ற மைந்தன் பிறக்கின்றான்.’’

     அணங்கொருபால் அமர்ந்தபிரான் திருவடிக்கு மெய்யன்பன்
அகில நூலும், உணர்ந்துதெளிந் தெனைஒப்பான் பாணியா தின்னேவந்
துறுமா காணென், றிணங்கமொழிந் தேகியபின் வசிட்டனுந்தன்
மனக்கவலை யின்றி வாழ்ந்து, வணங்கும்இடை அருந்ததியோ
டானந்தந் தலைசிறப்ப வைகும்போது,                        11

     மங்கை பங்கன் திருவடிக்கு மெய்யன்பு பூண்டவனும், அனைத்து
நூல்களையும் ஓதி உணர்ந்து தெளிந்தெனை ஒப்பவனும் ஆகிய அவன்
தாமதியாது இப்பொழுதே தோன்றுவன் காணுங்கோள்’’ என்று உடன்
படக் கூறி ஏகிய பின்னர் வசிட்ட முனிவரும் தம் மனக்கவலை தவிர்ந்து
மகிழ்ந்து நுணங்கும் இடையினையுடைய அருந்ததியோடும் கழிபேருவகை
மீதூரவைகும்போது,