பக்கம் எண் :


238காஞ்சிப் புராணம்


     சத்திமனைக் கிழத்தி அதிர் சந்திபால் உலகுய்யத் தருமம்
வாழ, உத்தமச்சீர்ப் பராசரன்வந் தவதரிப்ப இராக்கதர்தம் ஊர்கள்
தோறும், மொய்த்தெழுந்து குருதிமழை பொழிந்தனவால் முனித்
தலைவன், மகவை நோக்கி, மெய்த்தமனங் களிகூர்ந்து சாதமுதற்
சடங்கனைத்தும் விதியிற் செய்தான்.                       12

     உலகோர் வாழவும், தருமம் தழைப்பவும் சத்தி முனிவர் மனைவியாகிய
அதிர்சந்தியினிடத்துப் பெருஞ் சிறப்பினையுடைய பராசரர் வந்தவதாரஞ்
செய்ய அரக்கர்களின் இருப்பிடங்களில் எல்லாம் செறிந்தெழுந்து இரத்த
மழை பொழிந்தன. வசிட்டர் குழவியைப் பார்த்து மெய்த்தவமுடைய உள்ளம்
மகிழ்ச்சி மிகுந்து சாதகன்மம் முதலான சடங்குகள் யாவும் நூல் முறையிற்
செய்தனன்.

     இளம்பிறைபோல் வளர்மைந்தன் ஒருஞான்று மடித்தலமீ திருந்து
நோக்கி, வளம்பயிலும் மங்கலமின் றிருந்தனையால் யாண்டையன்
மற்றெந்தை என்ன, உளம்பரியப் பயந்தாளை வினாவுதலும்
அவள்கேட்டங் குள்ளம் மாழ்கி, விளம்புவாள் பிள்ளாய்உன்
தந்தைதனை வெகுண்டரக்கன் மிசைந்தான் என்று.           13

     இளம்பிறையை ஒத்து நாடொறும் வளர்கின்ற மைந்தன் ஓர்கால்
தாயின் மடிமீதிருந்து ஊன்றி நோக்கி ‘நலஞ்செறியும் மங்கல நூலின்றி
இருந்தனை என் தந்தை எவ்விடத்துள்ளனன்’ என வருத்தம் தோன்ற ஈன்ற
தாயை வினாவியபோது அத் தாய் வருந்திப் ‘பிள்ளாய்! உன் தந்தையைச்
சினத்துடன் அரக்கன் விழுங்கினான்’ என்று கூறி,

     அழுதிரங்கிக் கண்ணீரான் இளமைந்தன் றனைஆட்ட அருகு
சூழ்ந்த, வழுவகன்ற முனிமடவார் முனிவரரும் அருந்ததியும்
வசிட்டன்றானும், தொழுதியெனக் கிடந்தரற்றி அழக்கண்டு
சூலிதிருவருளால் இன்னே, முழுதுலகும் வாய்மடுப்பல் எனவெகுண்டான்
முனிவர்இள ஏறு போல்வான்.                           14

     அழுது, வருந்திக் கண்ணீரால் தன் மகவைக் கழுவியபோது அருகிற்
சூழ்ந்திருந்த குற்றமற்ற முனிவரர் பன்னியரும், முனிவரரும், அருந்ததியும்,
வசிட்டரும் பறவைக் கூட்டத்தொலியெனக் கூவி அழுதலைக் கண்டு
முனிவரருள் இளங்சிங்கம் போன்ற பராசரர் ‘சூலபாணியின் திருவருளால்
இப்பொழுதே உலக முழுதையும் எடுத்து விழுங்குவேன் எனக் கூறி’
வெகுண்டனன்.

வசிட்ட முனிவர் உபதேசம்

     அம்மொழிகேட் டுயர்வசிட்டன் உலகெல்லாம் என்செய்யும்
அப்பா அந்த, வெம்மைநிலை அரக்கர்குலம் வேரறுப்பச் சிவபூசை
விழையாய் என்ன, இம்முறையேல் விடையூர்தி என்பூசை கொண்டருளி
இன்னே நல்குஞ், செம்மைநூல் துணிபான சிறந்ததலம் யாததனைச்
செப்பு கென்றான்.                                     15