பக்கம் எண் :


பராசரேசப் படலம் 239


     அம்மொழியைச் செவியேற்ற உயர்ந்த வசிட்ட முனிவர் ‘அப்பனே,
பாவம்! உலகமென் செய்யும். கொடுமை நிலைபெற்ற அரக்கர் கூட்டத்தை
வேரொடும் களையும் ஆற்றலைப் பெறச் சிவபூசனையை விரும்புவாய்’
என்று கூற ‘இது வழியாயின், விடையூரும் பரன் என்னுடைய பூசனையை
ஏற்றருளி இப்பொழுதே ஆற்றலை நல்கும் உண்மை நூல்வழிச் சிறந்த தலம்
யாது? அதனைக் கூறுக’ என்றனன்.

கலிவிருத்தம்

என்றலும் நன்றுநீ வினாய திந்நலந்
துன்றிய பெரும்பதி தூய வானவர்
முன்றிலும் அரங்கமும் முகில்உ ரிஞ்சநீள்
மன்றமும் முழவறாக் காஞ்சி மாநகர்.           16

     என்று வினாவலும், ‘நீ நன்றே வினாயினை. விரைந்தருள் செய்யும்
இந்த நன்மை செறிந்த பெருந்தலம் சிவபிரான் திருக்கோயில்களின்
முன்பினும், நாடக சாலைகளினும், மேகங்கள் தவழும்படி நீண்ட 
பொதுவிடங்களிலும் முழவொலி மாறாத காஞ்சிமா நகரம்.

மறுவறு வானவர் மனிதர் மற்றுளோர்
உறுபெருந் தவர்எனை உள்ளிட் டோர்களும்
பெறலரும் பேறுபெற் றெய்தும் பெட்பின
திறுவழி நினைப்பினும் முத்தி ஈவது.            17

     குற்றமற்ற தேவரும், மனிதரும், மிகப் பெருந்தவருள் என்னை
உள்ளிட்டவர்களும், பிறரும் பெறலரிய பேற்றினைப் பெற்றுறும் விருப்பினது;
இறக்கும் பொழுது நினைப்பினும் முத்தியைத்தரும் பெருமையது.

பன்னருங் கொடியவெம் பாத கர்க்கும் அப்
பொன்நகர் வரைப்பின்ஓர் தினத்துள் போர்விடை
மன்னவன் திருவருள் வாய்க்கு மேயெனின்
உன்னைஒப் போர்க்கினி ஓதல் வேண்டுமோ.      18

     பேசற்கரிய மாபாதகர்க்கும் அந்நகரிடை ஓர் நாளளவிற்குள்
பொருவிடை ஒன்றுடைப் புண்ணியமூர்த்தி தன் திருவருள் கிடைக்கப்
பெறுமெனின் உன்னைப்போல் உய்ர்ந்தவர்க்கும் அருள் வாய்த்தலை
ஓதுதலும் வேண்டுமோ? வேண்டா என்க.

     கைமுதிக நியாயத்தாற்கூறல். ‘துன்னியார் குற்றமும் தூற்று மரபினார்,
என்னைகொல் ஏதிலார் மாட்டு’ என்புழிப்போல என்க.

ஆயிடைச் செல்கெனும் வசிட்டன் அம்புயத்
தூயமென் மலர்ப்பதந் தொழுதெ ழுந்துதன்
தாயினை விடைகொடு தடங்கொள் காஞ்சியில்
காய்பொறிப் பராசரன் கடுக எய்தினான்.         19