‘அங்குச் செல்க’ எனக்கூறும் வசிட்டருடைய தாமரை மலர் போலும் பாதங்களை வணங்கி எழுந்து தன் தாயையும் தொழுது விடுத்துத் தடங்கள் சூழும் காஞ்சிமா நகரில் ஐம்பொறிகளையும் சீறியடக்கிய பராசரன் விரைய அடைந்தான். கம்பைநீ ராடிஏ கம்ப நாயகர் தம்பனி மலர்ப்பதந் தாழ்ந்து மஞ்சள்நீர் வம்பவிழ் கரைமிசை மணிகண் டேச்சர நம்பர்தம் வடகுட ஞாங்கர் நண்ணினான். 20 | சிவகங்கையில் மூழ்கித் திருவேகம்பப் பெருமான் தமது குளிர்ந்த மலரை ஒக்கும் பதங்களைத் தொழுது நறுமணங் கமழும் மஞ்சள் நதிக் கரையில் மணிகண்டேசப்பெருமான் தலத்திற்கு வடமேற்குப் பக்கத்தினை நண்ணினான். சிவகங்கையில் நீராடித் திருவேகம்பப் பெருமானைத் தொழுத பின்னரே தத்தம் பெயரால் சிவலிங்கமும், தீர்த்தமும் கண்டு பயன் பெற்றனர். யாவரும் எனக் கருத்திருத்துக. தன்பெயர் இலிங்கம்ஒன் றிருத்தித் தாவிலா அன்பினின் மலர்எடுத் தருச்சித் தேத்துழிப் பொன்புரி வேணியோன் கருணை பூத்தெதிர் வன்பழ விடைமிசை வந்து தோன்றியே. 21 | பராசரேசப்பிரான் எனப்பெயரிய சிவக்குறி நிறுவிக் குற்றமற்ற மெய்யன்பொடும் மலர் கொய்து அருச்சனை; செய்து துதி செய்த வழிப் பொன் விரும்பத்தக்க ஒளியுடைச் சடைப்பெருமான் கருணை மலர்ந்து வலிமை அமைந்த பழமை இடபமேல் வந்தெதிர் தோன்றி, வேட்டன கூறுகென் றருள வேதநூற் பாட்டினாற் பலமுறை பழிச்சித் தாழ்ந்துமுன் வாட்கதிர் ஐம்படை மார்பிற் கிண்கிணித் தாட்டுணை மழமுனி சாற்றல் மேயினான். 22 | ‘விரும்பியவற்றைக் கூறுக’ எனப் பெருமான் வாய்மலரப், பேரொளியைப் பரப்புகின்ற ஐம்படையணிந்த மார்பினையும், கிண்கிணி யணிந்த இரு காலினையும் உடைய இளைய முனிவரன் வேத நூற்பாக்களால் பலமுறையும் துதித்து வணங்கி முன் நின்று கூறத் தலைப்பட்டனன். காத்தற் கடவுளாகிய திருமாலினது சங்கு, சக்கரம், தண்டு, வாள், வில் என்னும் ஐந்து ஆயுதங்களின் வடிவாகச் செய்து மார்பிற் சாத்துதல் குழந்தைகட்குத் தீயன நிகழாதிருத்தற் பொருட்டென்க. இலக்கியங்களில் ஆங்காங்குப் பேசப்பெறும். ஐம்படையும், கிண்கிணியும் பாலப்பருவத்தை வலியுறுத்தும். வாள் கதிர்-பேரொளி; மீமிசைச்சொல். |