பக்கம் எண் :


பராசரேசப் படலம் 241


எறுழ்விடைப் பரிமிசை எந்தை எந்தைஓர்
குறுவலி அரக்கனாற் கோட்பட் டான்அவன்
உறுகுல முழுவது மறலி ஊர்புகத்
தெறுவரம் எனக்கருள் செய்ய வேண்டுமால்.      23

     வலிமை அமைந்த விடையாகிய ஊர்தி மேல்விளங்கும் எந்தையே! 
என் தந்தையாகிய சத்திய முனிவன் ஓர் அற்பவலியுடைய அரக்கனாற்
கொலையுண்டனன். அவன் தோற்றிய அசுர குலமுழுதும் இயமனுடைய
ஆளுகைக்குட்பட; அழிக்கின்ற ஆற்றலை அடியேனுக்கருள் செய்யவேண்டும்.

     எந்தை-இறைவன் உயிர்த்தந்தையாய்ப் பெத்த முத்தியினும் அருள்
வோன்; சத்திய முனி உடற்றந்தையாய் இப்பிறப்புத் தோன்ற இறைவன்
படைப்பிற்குக் கருவியாய் நின்றவன்.

ஈண்டுநீ இனிதமர்ந் தெவர்க்கும் இன்னருள்
மாண்டகு சிறப்பினின் வழங்க வேண்டுமால்
ஆண்டகை என்றிரந் தன்பு மேதக
வேண்டலும் எம்பிரான் விளம்பல் மேயினான்.     24

     ‘ஆண் தகையே! நீ விரும்பி வீற்றிருந்து யாவர்க்கும் திருவருளை
மாட்சிமை அமைந்த சிறப்பொடும் வழங்க வேண்டும்’ என் றிரந் தன்பு
மேம்பட வேண்டிய காலை எமது பெருமான் எடுத்தோதினர்.

பராசரர் வரம்பெறல்

மைந்தநின் பூசையில் தம்பி மாரொடு
நுந்தைமற் றெமைஅடைந் துற்று நோன்மைசால்
அந்தண னாம்உனைக் காணும் ஆசையின்
முந்துற நின்றவா காண்டி மொய்ம்பினோய்.      25

     ‘மைந்தனே! நின்னுடைய பூசனையின் பயனாகத் தம்பிமாரொடும்
உனது தந்தை எம்மைச்சார்ந்து வலிமை அமைந்த அந்தணனாகும்
உன்னைக் காணவேண்டும் விருப்பினால் முற்பட நின்றவகையைக் காணுதி;
தவவன்மையுடையோனே! 

     மகன்செய் பூசனை தந்தையையும், சிறிய தகப்பன்மாரையும்
சிவதரிசனத்திற்குரிமைப் படுத்தியது. பண்புடை மக்களை ஈன்றதன் பயன்
(திருக். )

அரக்கரைக் கொலைசெயும் வேள்வி யாற்றிஅந்
நெருப்பினில் அவர்தமை நீறு செய்திஇவ்
வரைப்பினில் என்றும்நாம் மகிழ்ந்து வாழ்துமென்
றுரைத்தனன் மறைந்தனன் வேதத் துச்சியில்.     26