பக்கம் எண் :


242காஞ்சிப் புராணம்


     கொலை செய்தற்குரிய வேள்வியை இயற்றுதி. அவ்வேள்வித் தீயில்
அரக்கரை நீறுபட அழித்தி. இச்சூழலில் யாம் என்றும் மகிழ்ந்து வாழ்வோம்’
என்றருளி வேத சிரசில் மறைந்தனன்.

பராபரன் திருவருள் பெற்றுப் பாய்புகழ்ப்
பராசர நெடுந்தகை பணைத்த வேள்வியில்
பராய்மனத் தரக்கரை நீற்றிப் பாற்றினான்
பராயசீர் உறுவர்தம் பகர்ச்சி யாற்கதம்.         27

     மேலோர்க்கு மேலோன் திருவருளைப் பெற்றுப் பரவிய புகழையுடைய
பராசரர் என்னும் பெயர்பூண்ட பெருந்தகை கிளைத்தெழுந்த தீயையுடைய
வேள்வியில் வலியபராய் மரத்தை ஒக்கும் மனவலி படைத்த அரக்கரை
அழித்துப் பரவிய சிறப்பினைமுடைய முனிவர் நல்லுரையால் கோபத்தை
ஒழித்தனன்.

எழுசீரடி யாசிரிய விருத்தம்

     விரிபுனல் படிந்தோர் பருகினோர் தீண்டப் பெற்றுளோர்
தமக்கும்வீ டளிக்கும், முரிதிரை முகட்டு வராலினம் உகளும்
முழங்கொலி மஞ்சள்நீ ராற்றங், கரைமிசைத் தகைசால் முனிவரர்
வழுத்துங் கண்ணுதல் வளாகங்கள் இன்னும், உரைசெயப் புக்கால்
உலப்புறா காண்மின் உயர்நிலைப் பெருந்தவ முனிவீர்.         28

     உயர்நிலையையுடைய பெருந்தவ முனிவர்களே! பரப்பமைந்த
தீர்த்தத்தில் மூழ்கினோர், பருகினோர், தீண்டினோர் யாவர்க்கும் முத்தியை
நல்கும் முரிகின்ற திரைமேல் வராற் கூட்டங்கள் புரளும் ஒலிக்கின்ற
ஒலியுடைய மஞ்சள் நதிக்கரைமேல் தகுதி அமைந்த முனிவரர் துதிசெய்யும்
சிவபிரான் தலங்கள் மேலும் கூறப்புகின் முடிவுறா உணர்மின்.

     இட்ட சித்தீச்சரம் 9-ஆம் செய்யுளொடும் ஒப்பு நோக்குக.

பராசரேசப் படலம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம். 791