அத்தலத்திற்குப் பொருந்தும். காலமென்னும் தத்துவமுமாகிக் காலத்தையுங் கடந்து நிற்கின்ற பெருமான் வழிவழியாக இங்ஙனம் வருகின்ற அளவில்லாத பிரமர்களையும் திருமால்களையும் திருமேனியில் தரித்துக் கருணையொடும் அவ்விடத்து நடம்புரியா நிற்கும். காயம்+ஆரோகணம்=காயாரோகணம்; உடம்பை (சிவபிரான்) ஏற்றல். காலத்திற்குக்காலமாவான்; ‘கலையித்திரி’ சத்தியாய் நிற்றலை ‘வித்தையோ’ (சிவஞா. சி. 86) என்பதன் விசேடவுரை காண்க, ஆதலாற் சிறந்த திருநகர் அதனை அடைந்துளோர் இருமையும் எய்தி, மேதகு துரியங் கடந்தபே ரின்ப வீட்டினைத் தலைப்பட வல்லர், சீதள கமலப் பொகுட்டணைக் கிழத்தி செஞ்சடைப் பிரானைவில் லத்தால், கோதற வழிபட் டச்சுதன் தனக்குக் கொழுநனாப் பெற்றனள் அங்கண். 7 ஆதலான் மேம்பட்ட திருநகரம் அதனை அடைந்தவர் இம்மை மறுமைப்பயன்களைப் பெற்று மேன்மை தங்கிய துரியங்கடந்த பேரின்ப வீட்டினைத் தலைப்படவல்லர் ஆவர்; திருமகள் சிவந்த சடையுடைப் பெருமானை வில்வங்கொண்டு அங்கே குற்றமற வழிபாடு செய்து திருமாலைத் தனக்குக் கணவனாகப் பெற்றனள். பிறங்கொளி விசும்பிற் குரவனாம் வியாழப் பெருந்தகை ஆயிடை எய்திக், கறங்கிசை விளரிப் பாட்டளி இமிர்ந்து களிமதி உண்டுதேக் கெறிந்தங், குறங்குபொன் இதழி நறுந்தொடை வேணி ஒருவனை அருச்சனை யாற்றி, அறங்கரை சிறப்பிற் சேந்தநாத் தழும்ப ஆரண மொழிகளால் துதிப்பான். 8 பேரொளியுடைய வானிடைத் தேவர்க்கு ஆசாரியராம் வியாழப் புத்தேள் காயாரோகணத்தை அடைந்து ஒலிக்கின்ற இசையாகிய விளரிப்பண்ணைப் பாடுகின்ற வண்டுகள் ஒலித்து களிப்பைத் தரும் மதுவைப்பருகி எதிரெடுத்து மயங்கி உறங்குகின்ற பொன்னொக்கும் கொன்றை மலர் மாலையை அணிந்த சடையுடை ஒப்பற்ற பெருமானை அருச்சனை செய்து அறங்கூறுகின்ற சிறப்பினையுடைய சிவந்த நா வடுப்பட வேதப்பாக்களால் துதி செய்வான். ஒருவன்; ‘ஒப்புனக்கில்லா ஒருவனே’ (திருவாசகம்) பிராமணன் நீயே கடவுளர் தம்முள் பிஞ்ஞகா ஏனையோர் தம்முள், பிராமணன் யானே பிராமணன் றனக்குப் பிராமணன் கதிஉனை இகழ்வோன், பிராமணன் அல்லன் தன்குல தெய்வம் விண்டுபின் னொன்றனைத் தொழும்அப், பிராமணற் கிரண்டும் பயப்படா நிரையம் புகுவன்என் றுயர்மறை பேசும். 9 |