தலைக்கோலம் அணிந்த பிஞ்ஞகனே! கடவுளர் தம்மில் வைத்து நீயே பிராமணன், ஏனையோரிடை வைத்து யானே பிராமணன் ஆவன். பிராமணனுக்குப் புகலிட மாவோன் பிராமணனே. உன்னை வழிபடாமையால் இகழ்வோன் பிராமணனாகான். தன் குலதெய்வத்தை விடுத்து வேறோர் தெய்வத்தை வணங்கும் அப்பிராமணனுக் கிருதெய்வமும் கைகொடாமையால் அவன் நரகிடைப்புகுவன் என்றுயர்ந்த வேதம் கூறும். அப்பிராமணன் பிறப்பால் பிராமணனாய் உரிய ஒழுக்கத்தைக் கைவிட்டமையால் பிராம்மணன் அல்லனாய் அப்பிராமணனாவன். இரு பயனும் இழத்தல்; போகமும், பரபோகமும் இழந்து நரகெய்தல். அடியனே உன்தாள் அடைக்கலம் நீயே அன்னையும் அத்தனும் குருவும், துடிஇடைப் பதுமை கேள்வனும் அயனுந் தொடர்வருஞ் சோதியே செல்வக், கொடிமிசை இடபம் உயர்த்தருள் கருணைக் குன்றமே அருட்பெருங் கடலே, படிபுகழ் மறைநூல் வடித்ததெள் ளமிழ்தே பகவனே இணையடி போற்றி. 10 ‘அடியனேன் உன் அடைக்கலப் பொருள். தாயும், தந்தையும், குருவும் நீயே ஆவாய். துடியனைய இடையினையுடைய திருமகள் நாயகனும், பிரமனும், தொடரலாகாச் சோதியே! சிறப்புடைய இடபக் கொடியையுடைய கருணை மலையே! கிருபா சமுத்திரமே! உலகோர் புகழ் வேதநூல் வடித்தெடுத்த தெளிந்த அமிழ்தமே! பகவனே திருவடிகளுக்கு வணக்கம். என்றெடுத் தேத்தும் ஆண்டளப் பானுக் கெம்பிரான் எதிர் எழுந் தருளி, நன்றுநீ வேட்ட கூறுகென் றருள வீழ்ந்துவீழ்ந்திறைஞ்சினன் நவில்வான், குன்றவில் குழைத்துப் புரிசைமூன்றிறுப்பக் குறுநகை முகிழ்த்தருள் குழகா, நின்திரு வடிக்கீழ் இடையறாப் பத்தி நெறிஎனக் கருள்செய வேண்டும். 11 என் றுயர்த்துப் புகழும் குருவினுக் கெமது பெருமான் எதிர் தோன்றிப் பெரிதும் நீ விரும்பிய கூறுக என்றருள் செய்யப் பன்முறை வணங்கிக் கூறுவான் ‘மேரு மலையை வில்லாக வளைத்து முப்புரத்தையும் அழிக்கவேண்டிப் புன்சிரிப் பரும்பி யருளிய குழகனே! நின் திருவடிக்கண் ஓர் காலும் மறவாத பேரன்பினை எனக்கருள் செய்யவேண்டும்!’ வியாழன், மேட முதலிய இராசிகளில் ஆண்டொன்றிற்கு ஓரிராசியாகக் கால அளவு கொள்ளுதலின், ஆண்டளப்பான் எனப்பெறுவர். வளங்கெழு வேக வதிநதித் தென்பால் வயங்கும்இத் தீர்த்த நீர் படிந்து, விளங்கும்என் வாரத் துன்னடிச் சேவை விழைதகப் பெற்றுளோர் தத்தம், உளங்கொளும் உறுதிப் பயன் அளித்தருளி முத்தியும் உதவிஈண் டென்றும், இளங்கதிர் முலையோடினிதமர்ந் தருளாய் இவ்வரம் வேண்டும் என் றிரந்தான். 12 |