பக்கம் எண் :


256காஞ்சிப் புராணம்


     வளமருவும் வேகவதி நதியின் தெற்குப் பக்கத்தில் விளங்கும்
இத்தீர்த்தத்தில் மூழ்கி விளங்கும் என் வாரத்தில் (வியாழக்கிழமை) உன்னடித்
துணையை விரும்பி வழிபட்டோர் தத்தம் மனங்கொள்ளும் உறுதிப் பயனை
அருளி மேலும் முத்தியையும் உதவி இந்தத் தலத்தெந்நாளும் இளமையும்
கதிர்ப்பும் உடைய கொங்கையாளோ டினி தமர்ந்தருளும் இவ்வரங்கள்
வேண்டுமெனக் குறையிரந்தனன்.

     திருமகள் வழிபட்டமையின் இந்நாள் அத்தீர்த்தத்திற்குத் தாயார்
குளம் எனப்பெறும். திருமகள் வழிபாட்டாற் செல்வமும், குருவழி பாட்டான்
மெய்யறிவும் வழிபடுவார்க்குக் காயாரோகணப் பெருமான் அருள் செய்வர்.

இயமன் வழிபாடு

     அங்கவை வழங்கிக் கடவுளர்க் காசான் ஆம்பெருந் தகைமையும்
நல்கிச், சங்கவெண் குழையான் இலிங்கத்தின் மறைந்தான் தருமன்அங்
கெய்திஏத் தெடுப்பப், புங்கவன் தோன்றித் தென்திசைக் கிறையாம்
புரவளித் தெமைவணங் குநர்க்கு, மங்கருந் தண்டம் இயற்றில் அன்
றுனக்கு மாளும் இப் பதமென விடுத்தான்.                   13

     அவ்வரங்களை அருள் செய்து தேவர்களுக் காசாரியனாம்
பெருந்தகுதியையும் தந்து வெள்ளிய சங்கக் காதணியினனாகிய பெருமான்
சிவலிங்கத்தில் மறைந்தருளினன். இயமன் அத்தலத்தினை அடைந்து
துதிப்பப் பெருமான் எழுந்தருளித் தென்திசைக் கிறைவனாம் காவலைத்
தந்தருளி ‘எம்மை வணங்கும் அடியவர்க்கு மங்குதற்குரிய கடுந்தண்டனை
இயற்றின் அன்றே இப்பதவி உனக்ககலும்’ எனக்கூறி விடுத்தனன்.

     தென்புலத் தவர்க்குச் செய்கடன் ஆங்குச் செலுத்திடின்
வீடுபெற் றுய்வார், மின்பழுத் தன்ன நெறித்தவார் சடிலம் வீழென
வெரிந்புறங் கிடப்பப், பொன்பழுத் தனைய ஐந்தழல் நாப்பண்
புரிதவக் கொள்கையீர், அனேகர், அன்புசெய் தங்கண்பேறுபெற்
றுயர்ந்தார் அத்தல மேன்மையார் மொழிவார்.                14

     பிதிரர்க்குச் செயத்தகு கடனை ஆங்கே செய்து முடித்தால் வீட்டினைப்
பெற்றுய்வர். மின்னல் முதிர்ந்தாலொத்த நெறித்து நீண்ட சடைவிழுதுபோல
முதுகிற்கிடக்கப் பழுக்கக் காய்ச்சிய பொன்னனைய பஞ்சாக்கினியிடையே
அருந்தவம் புரிந்த கொள்கையை யுடையீர்! எண்ணிலர் அத்தலத்தில் அன்பு
செய்து பல்வகை நலங்களும் பெற்றுயர்ந்தனர். ஆதலின், அத்தலத்தின்
உயர்வை முற்றும் கூறுவார் யாவர்?

     வெரிந்புறம்-முதுகு. நெருப்பிடைப் பொன் அழுக்ககன்று மாற்றுயர்தல்
போலத் தவத்தால் அழுக்ககன்று அறிவொளி பெறுவர் எனக்கூறினர்.
‘‘சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம், சுடச்சுட நோற்கிற் பவர்க்கு’’
(திருக். 267.)

காயாரோகணப் படலம் முற்றிற்று.

ஆகத்திருவிருத்தம் 835.