சுக்கிரன் உபதேசம் சுக்கிரன் உணர்ந்து போந்து துணியுடல் பொருத்திக் கூட்டி அக்கணத் தெழுப்பித் தேற்றி அறைகுவான் முனிவ கேண்மோ நக்கலர் கமல வாவிக் காஞ்சியின் நணுகி அன்பான் முக்கணற் றொழுதி யாண்டுங் கொலையுறா முதன்மை கோடி. 7 | சுக்கிரன் முனிவர் நினைவை உணர்ந்து வந்து துணிபட்ட உடம்பைப் பொருத்திச் சேர்த்து அந்நிலையே உயிர் பெறச்செய்து தேறுதல் கூறி, மேலும் ‘முனிவனே கேட்டி’ எனக்கூறுவான்; ‘ஒளிவிட்டு மலர்கின்ற தாமரைத் தடங்கள் நிரம்பிய காஞ்சி நகரைத்தலைப்பட்டு முக்கண் முதல்வனை அன்பொடுந் தொழுது எப்பொழுதும் எவ்விடத்தும் கொல்லப்படாத நிலைமையைக் கொள்ளுதி ! இழைமணி மாடக் காஞ்சி இட்டசித் தீச வைப்பின் மழைதவழ் மிடற்றுப் புத்தேள் மலரடி வழுத்திப் பெற்றேன் விழைதகு மிருத சஞ்சீ வினிஇது அதன்தென் பாங்கர்த் தழைபுகழ் இட்ட சித்தி தரும்புனல் தடம்ஒன் றுண்டால். 8 | மணிகள் இழைக்கப் பெற்ற மாடங்களைக் கொண்ட காஞ்சியில் உள்ள இட்ட சித்தீசத் தலத்திடை மேகம்போலும் கண்டத்தினையுடைய சிவபிரான் திருவடிகளைத் துதித்து விரும்பத்தக்க மரணந் தவிர்க்கும் மருந்தாகிய மிருத சஞ்சீவினியைப் பெற்றேன். அத்தலத்திற்குத் தெற்கில் தவழ்கின்ற புகழ் கொண்ட இட்ட சித்தியைத் தரும் தீர்த்த முடைய தடாகம் ஒன்றுளது. அத்தடம் படிந்தோர் தம்பால் ஆரருள் சுரக்கும் ஈசன் பத்தியால் அதனைக் கண்டோர் தீண்டினோர் பருக லுற்றோர் புத்தியோ டாடப் பெற்றோர் அறம்பொருள் இன்பம் வீடாம் சித்திகள் பெறுவார் என்றால் அதன்புகழ் செப்பற் பாற்றோ. 9 | அத்தீர்த்தத்தில் மூழ்கினோர், தமக்குப் பிறர்க்கரிய பேரருளைப் பாலிப்பன ஈசன், பேரன்பொடும் அவ்விட்ட சித்தித் தீர்த்தத்தைத் தரிசித்தோரும் தீண்டினோரும், பருகினோரும், புத்தி பூர்வமாக மூழ்கினோரும் அறத்தையும், பொருளையும், இன்பத்தையும், வீட்டினையும் பெறுவார் என்றால் அத்தீர்த்தத்தின் புகழ் பேசும் பான்மையதோ? எழுசீரடி யாசிரிய விருத்தம் மல்லல் நீர்அரி வாரம் மூழ்கிடின் மகவி லான்மக வீன்றிடும் இல்லம் இல்லவன் மனைவி எய்துவன் ஆயுள் இல்லவன் அஃதுறும் கல்வி இல்லவன் கல்வி எய்துவன் கண்ணி லான்விழி பெறுகுவன் செல்வம் இல்லவன் செல்வம் மேவுவன அரசி லான்அரசு செய்யுமால். 10 | |