பக்கம் எண் :


274காஞ்சிப் புராணம்


     திரிபுரராகிய பகைவரைப் புன்சிரிப்பால் அழித்தருளிய மெய்யறிவின்
மேலோன் மலையரையன் மகளாகிய மயில்போலுஞ் சாயலுடைப் பெருமாட்டி
யொடும் தனித்திருந்து ஐம்பெரும்பூதங்கள், திருமால் பிரமன் முதல் பல்
சராசரங்கள் ஆகிய எவ்வியல்பினவாய் உள்ள அனைத்தினையும் அழித்து
அவ் இரவிடை அம்மையார் காணத் திருநடம் புரிந்து அவற்றை மீளவும்
படைத்தற் பொருட்டுத் திருவுளம் பற்றியருளினன்.

     கன்ம மலம் பரிபாக மாதற்பொருட்டு ஒடுக்கி, ஆணவ மலம் பரிபாக
மாதற்பொருட்டு மீளவும் தோற்றுவிப்பன். தத்துவ தாத்துவிக விளக்கங்கள்
யாவும் ஒடுங்கி ஆன்மாக்கள் அறியாமை வயத்தவாய் நிற்றலை இரவு என்பர்.
எஞ்சி நிற்பது அந்நிலையில் தானும் தன் சிற்சத்தியுமே ஆகலின் மயிலொடும்
என்றனர்.

உலகெலாம் அழிவுறுங் காலையுந் தன்னுடைக் காவலிற்
குலவுசீர்க் காஞ்சியிற் சோதிலிங் கத்துருக் கொண்டெழுந்
திலகுதன் சத்தியான் முன்புபோல் யாவையும் நல்கினான்
அலகிலா நாமரூ பங்களும் ஆக்கினான் அண்ணலே.      3

     எல்லா உலகங்களும் அழிவுற்ற காலத்தும் தன்னுடைய பாதுகாப்பான்
விளங்குகின்ற சிறப்பினையுடைய காஞ்சிபுரத்தில் சோதி மயமான
சிவலிங்கத்தினின்றும் திருவுருக்கொண்டு தோன்றித் தனது சிற்சத்தியின்
துணையால் முன்பு போல எல்லாப் புவனங்களையும் படைத்தனன்.
அவற்றிடை அளவிடப்படாத இயங்கியற் பொருள்களையும், நிலையியற்
பொருள்களையும் படைத்தருளினன் தலைவனாகிய சிவபிரான்.

     ‘‘ஈறுசேர் பொழுதினும் இறுதி இன்றியே, மாறிலா திருந்திடுவளங்
கொள் காஞ்சி’’ (கந்த. பாயிரம்) இறைவன் படைப்பிலும், காப்பினும்
அமைந்தது காஞ்சி. ஏனையோர் போலக் கரணத்தானன்றிச் சங்கற்ப
மாத்திரையாற் செய்தருளுவன் ஆகலின் ‘தன்சத்தியால்’ என்றனர்.

பிரமன் வழிபட்டது.

போற்றுசீர் அவ்விலிங் கத்தினைப் போற்றினோர் யாவரும்
மாற்றரும் வீடுபே றெய்துவர் நான்முகன் வாணியோ
டாற்றலான் ஆயிடை மாதவம் ஆற்றிஅவ் வங்கணன்
ஊற்றமார் அருளினால் படைத்திடுந் தலைமைபெற்றோங்கினான்.  4

     வழிபடற்குரிய சிறப்பினையுடைய அவ்விலிங்கத்தினை வழிபாடு
செய்தோர் யாவரும் ஒப்பில்லாத முத்தியைத் தலைப்படுவர். நான்முகன்
சரசுவதியோடும் அங்கு வந்து பெருவன்மையாற் பெரிய தவத்தைச் செய்து
அழகிய கண்ணோட்ட முடைய சிவபிரான் சுரக்கின்ற பேரருளால் சிருட்டித்
தொழிலுக்குத் தலைவனாகி உயர்ந்தனன்.

     ஊற்றம்-திரிபில்லாத வலிமை.