பக்கம் எண் :


273


     அத்தகைய வரங்கள் யாவும் இறைவனிடத்தே ஏற்றருளி மீண்டு
சென்று மெய்ச் சார்புடைய ததீசி முனிவர் அரசவையை அணுகிக் குபன்
என்னும் அரசனுடைய தலையைத் தன் குற்றமற்ற இடக்காலால் வீசி
உதைத்தனர். அவ்வரசன் பொருட்டுப் பகைத்துப் போரில் எதிர்ந்த
திருமாலையும் வெகுண்டு வென்றனர்

இடனுடைப் புரிசை சுற்றும் இட்டசித் தீச வைப்பில்
குடதிசை முகமா வைகுங் குழகனை வழிபட் டின்னும்
நடலைதீர்ந் திட்ட சித்தி நண்ணினர் எண்ணி லாதார்
புடவியில் அதன்றன் நீர்மை யாவரே புகலும் நீரார்.   25

     இடங்கொண்ட மதிழ்சூழ்ந்த இட்டசித்தீசத்தில் மேற்கு முகமாக
எழுந்தருளியுள்ள பெருமானை மேலும் வழிபட்டுத் துன்பம் தவிர்ந்து
விரும்பிய சித்திகளைப் பெற்றவர் அளவிலராவர். உலகில் அத்தலத்தின்
மேன்மையை முற்றவும் யாவரே கூறும் நிலைமையர் (ஒருவருமிலர்.)

இட்ட சித்தீச்சரப் படலம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம்-888

கச்சபேசப் படலம்

கலிநிலைத் துறை

ஓடரிக் கண்ணியார் ஆடலும் பாடலும் ஓவுறாச்
சேடமை இட்டசித் தீசமேன் மைஇது செப்பினாம்
ஆடமைத் தோளிஓர் பாகர்வாழ் அன்னதன் தென்புடைத்
தோடவிழ் சோலைசூழ் கச்சபே சத்தியல் சொல்லுவாம்.    1

     பரவிய செவ்வரிக் கண்ணுடைய மகளிரது ஆடலும் பாடலும் ஒருகாலும்
ஒழியாத பெருமை அமைந்த இட்ட சித்தீச்சரத்தின் உயர்வைக் கூறினோம்.
அசைகின்ற மூங்கிலை ஒத்த தோள்களையுடைய உமையம்மையை ஓர் கூற்றிற்
கொண்ட பெருமான் எழுந்தருளியுள்ள இடத்திற்குத் தெற்கில் இதழ்கள்
விரிகின்ற மலர்களையுடைய சோலை சூழ்ந்த கச்சபேசத்தின் இயல்பினைக்
கூறுவாம்.

பெருமான் உலகினைப் படைத்தல்

ஐவகைப் பூதம்மால் அயன்முத லாயபல் சராசரம்
எவ்வகை யுள்ளவும் ஈறுசெய் திமயமா மயிலொடும்
அவ்விர வாட்டயர்ந் தங்கவை மீளவும் ஆக்குவான்
தெவ்வடு குறுநகைச் சிற்பரன் திருவுளஞ் செய்தனன்.    2