பக்கம் எண் :


280காஞ்சிப் புராணம்


     விரைய வெளிப்பட்டுக் குறையிரந்துவேண்டி நிற்கும் தேவர் தங்களைப்
பார்த்து ‘முன்னே செல்லுமின்! பின்னே வருவேன்’ என்று கூறித் தாமரைப்
பொய்கையின் கரையில் நிலைபெறும் வன்னீச வள்ளற் பிரானை நிறுவி
விதி வழிப் பூசனை புரிந்து அப்பிரான் திருவருளைப் பெற்றுத் தேவர்க்கு
வேள்வியில் தரப்படும் அவியை முற்றும் சுமக்கும் ஆற்றலைப் பெற்றனன்.

     தமையன்மார் மூவர் சுமக்கலாற் றாது தளர்வுறும் அவியெலாந்
தானே, கமையுறப் பொறுக்கும் மதுகைபெற் றிமையோர் குழாத்தினுட்
கலந்தனன் கனலோன், இமையவில் வாங்கிப் புரிசைமூன் றிறுத்த
எந்தைவன் னீசனை அண்மி, அமைவரும் அன்பால் வழிபடப்
பெற்றோர் அருந்திறல் எய்திவீ டடைவார்.                   9

     தமையன்மார் மூவர் சுமக்க இயலாது தளரும் அவியை முற்றும்
தானொருவனே பொறுமையோடும் பொறுக்கும் வலிமையை எய்தித் தேவர்
குழுவினுள் சென்று சேர்ந்தனன் அக்கினி தேவன். மேருவை வில்லாக
வளைத்து மும்மதிலை அழித்த எமது தந்தையாகிய வன்னீசப் பெருமானைச்
சார்ந்து பொருந்துதல் வரும் பேரன்பால் வழிபடும் வாய்ப்பினர் பேராற்றல்
பெற்று வாழ்ந்து முத்தியையும் பெறுவர்.

சவுனகேச வரலாறு

     விளம்புவன் னீசந் தனக்குமேல் பாங்கர் விழைதகுஞ் சவுனகேச்
சரத்திற், களங்கனி விளர்ப்ப விடங்கிடந் திமைக்குங் கறைமிடற்
றடிகளை இருத்தி, வளம்பயில் காதற் சவுனக முனிவன் மரபுளி
அருச்சனை யாற்றி, உளம்பயில் மலநோய் தவிர்ந்துபேரின்ப வீடுபே
றுற்றதவ் வரைப்பு.                                      10

     பேசப்பெறும் வன்னீசத் தலத்திற்கு மேற்கில் விரும்பத்தக்க சவுனகேசத்
தலத்தில், களாம்பழமும் வெளிறுபட நீலம் காட்டும் விடங் கண்டத்தில்
தங்கி ஒளிவிடும் திருநீலகண்டப் பெருமானை எழுந்தருளுவித்து நலமிகும்
பேரன்புடைய சவுனக முனிவர் விதிப்படி அருச்சனை செய்து உயிரைப்
பற்றியுள்ள ஆணவ மலத்தான் ஆகும் பிறவி நோய் நீங்கிப் பேரின்ப
வீட்டினைத் தலைப்படுதற் கிடனாகியது அத்தலம்.

சகோதர தீர்த்தப் படலம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம்-911