என்றருள எதிர்இறைஞ்சி இராகவன்மற் றிதுவொன்று வினாதலுற்றான், அன்றினார் புரமெரித்தோய் குறுமுனிவன் ஆருயிர் கட் காண்மை பெண்மை, ஒன்றுமிலை யாக்கையெலாம் உடன் பிறந்த வாகுமென உரைத்தல் செய்தான், மன்றஎனக் கவைமுழுதுந் தேறவிரித் தருளென்று வணங்கி வேண்ட. 29 என்றருள் செய்ய எதிர் வீழ்ந்து வணங்கி இராகவன் மேலும் ஒன்றை வினாவத் தொடங்கினான். பகைவர் முப்புரங்களைச் சிரித்தெரித்த பெருமானே! அகத்திய முனிவர் எண்ணில்லா உயிர்களில் ஆண்மை, பெண்மை முதலிய கூறுபாடுகள் சிறிதும் இல்லை, உடம்புகள் யாவும் உடன் பிறந்தன ஆகும் எனக் கூறினர். உறுதிபெற அடியேனுக்கு அவை முழுதுந் தெளிய அருள் செய்’ யென்று வணங்கிக் குறைஇரப்ப, வேதாந்த நிலைஅனைத்தும் அவன்தெளிய விரித்துரைத்து வரங்கள் நல்கிக், காதார்ந்த குழைஉமையாள் உடனாக இலிங்கத்துட் கரந்தான் எங்கோன், நாதாந்தப் பரஞ்சுடராம் இவ்விலிங்கந் தனைத்தொழுது நயந்தோ ரெல்லாம், கோதார்ந்த பகைவென்று பெருஞ்செல்வம் எய்திஅருள் கூடு வாரால். 30 வேதாந்தமாகிய ஆகமங்களின் இயல்புகளை இராகவன் தெளிவெய்த விரித்துக் கூறி வரங்களையும் அருளிக் காதிற்கு அமைந்த தோட்டினை அணிந்த உமையம்மையாரொடும் சிவலிங்கத்துள் மறைந்தருளினர் எமது பெருமானார். தத்துவங்கடந்த தனிப்பேரொளியாம் இவ்விலிங்கந்தன்னை விரும்பித் தொழுவோர் யாவரும் குற்றம் நிரம்பிய பகைவரை வென்று பெருஞ் செல்வம் பெற்றுத் திருவருளைத் தலைப்படுவர். கற்கீச வரலாறு எண்சீரடி யாசிரிய விருத்தம் தகைபெறும்இக் கடிவரைப்பின் தென்பால் மண்ணித் தடங்கரையில் கற்கீசத் தலமாம் அங்கண், உகமுடிவில் கயவர்தமை அழிப்ப மாயோன் உயர்பிருகு சாபத்தால் கற்கியாகி, இகழருஞ் சீர்க் காஞ்சியில்வந் திலிங்கந் தாபித் தினிதேத்தி எண்ணிலரும் வரங்கள் பெற்றான், புகழுறும்அவ் விலிங்கத்தைத் தொழுது மண்ணிப் புனலாடும் அவர்பெறுவார் போகம் வீடு. 31 தகுதியமையும் இவ்வொளியுடைய சூழலின் தென் திசையில் மண்ணி என்னும் தீர்த்தக்கரையில் கற்கீசத்தலம் உள்ளது ஆகும். அவ்விடத்தில் யுகத்திறுதியில் கீழ் மக்கள் தம்மை அழிப்பதற்குத் திருமால் உயர்ந்த பிருகு முனிவர் சாபத்தால் கற்கியாகத் தோன்றி அரிய புகழ்படைத்த காஞ்சியை அடைந்து சிவலிங்கம் தாபித்தினிது துதித்து அளவிடலரிய வரங்களைப் பெற்றனர். மண்ணியில் மூழ்கிப் புகழ்மிக்கும் அவ்விலிங்கத்தைத் தொழுவோர் போகமோட்சங்களைப் பெறுவர். வீர ராகவேசப் படலம் முற்றிற்று. ஆகத் திருவிருத்தம் - 1087 |